வேள்விப் படலம் - 432
இரிசிகன் பிரமனுலகிற் புகுதல்
432.
காதலன் சேணின் நீங்க.
கவுசிகை தரிக்கலாற்றாள்.
மீது உறப் படரலுற்றாள்.
விழு நதி வடிவம் ஆகி.
மாதவர்க்கு அரசு நோக்கி.
‘’மா நிலத்து உறுகண் நீக்கப்
போதுக. நதியாய்’’ என்னா.
பூமகன் உலகு புக்கான்.*
காதலன் சேணின் நீங்க - கணவனான இரிசிகன் செய்த
தவப்பலனால் வான்வழி செல்வதற்குத் தன்னை விட்டு நீங்க; கவுசிகை
தரித்தல் ஆற்றாள் - என் முன்னவளான கவுசிகை பொறுக்க
இயலாதவளாகி; விழு நதி வடிவமாகி - பெரிய ஒரு நதிவடிவம்
எடுத்துக்கொண்டு; மீது உறப்படரல் உற்றால் - மேலே போகப்
புறப்பட்டாள்; மாதவர்க்கு அரசு நோக்கி- முனிவர்களுக்கு அரசனான
இரிசிகன் அதனைப் பார்த்து; மாநிலத்து உறுகண் நீக்க- நிலவுலகத்துத்
துன்பத்தைப் போக்க; நதியாய்ப் போதுக என்னா - ஆறாகப் பெருகிச்
செல்வாயாக என்று (கூறி); பூமகன் உலகு புக்கான் - பிரமன் உலகைச்
சென்றடைந்தான்.
காதலன்: கணவன். சேண்: உயர்வு இங்கு வானைக் குறிக்கும்).
தரிக்கல்: பொறுத்தல். மீது: உயர்வழி. படரல்: நகர்தல். உறுகண்:
துன்பம். போதுக: போவாயாக. வியங்கோள்வினைமுற்று. பூமகன்:
மலரில் இருப்பவன். புக்கான்: புகுந்தான்.
கணவன் விண்ணுலகேக. பொறுக்கலாற்றாத கவுசிகை நதியாகி
மேலே தொடர. இரிசிகன் உலகத்துத் துன்பம் நீக்க. ஆறாகச் செல்க
எனக்கூறி. பிரமனுலகு சென்றான் என்க. என்னா: என்று கூறி. செய்யா
என்ற வாய்பாட்டு வினையெச்சம். 13
