வேள்விப் படலம் - 424

bookmark

கௌசிகி நதியின் வரலாறு (424-433)

குசன் மக்கட்பேறு

424.

‘சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த
   தூநதி யாவது’ என்று.
வரமுனிதன்னை. அண்ணல்
   வினவுற. மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப்
   பெருந்தகைக் குசன் என்று ஓதும்
அரசர்கோன் மனைவி தன்பால்
   அளித்தவர் நால்வர் ஆகும்.*
 
சுரர்  தொழுது  இறைஞ்சற்கு ஒத்த- தேவர்களெல்லாம்  துதித்து
வணங்குவதற்கு  ஒத்ததாகிய;  தூநதி  யாவது  என்று  -  தூய  நதி
யாதாகும்  என்று; வரமுனி  தன்னை  அண்ணல்  வினவுற - சிறந்த
முனிவனாகிய    விசுவாமித்திரனைப்   பெருமைமிக்க  ராமன்  ்கேட்க;
மலருள்  வைகும்   பிரமன்   அன்றளித்த   -   தாமரை  மலரில்
தங்கியிருக்கும்  பிரமன்  முன்பு பெற்ற; வென்றிப் பெருந்தகை  குசன்
என்று  -   வெற்றியை  உடைய  பெருந்  தன்மையன்  ஆகிய  குசன்
என்று;  ஓதும் அரசர்  கோன்  -  பெரியோர்கள்  புகழ்ந்து   பேசும்
மன்னர் மன்னன்;  மனைவி  தன்பால் அளித்த மைந்தர்  அருமறை
அனையார்  நால்வர்  -  தன்  மனையாள்பால்  பெற்ற  பிள்ளைகள்
அரியமறைகளைப் போன்ற நால்வராவர்.

சுரர்:  தேவர்.  ஒத்த:  போன்ற.  தூ:   தூய்மை.  வைகல்:  தங்கல்.
வினைவுறு:  கேட்க.  ஓதல்:  புகழ்ந்து  சொல்லுதல்.  மறை:    வேதம்.
அரசர்கோன்: மன்னர் மன்னன்.

தேவர்களும்   வணங்கும்  அந்த  நதி  யாவது  என   ராமபிரான்
விசுவாமித்திர   முனிவனைக்  கேட்க.  அதன்  வரலாறு    கூறுகிறான்
முனிவன். பிரமனுக்கு மகன் குசன் என்னும்  வேந்தன்.  அவன்   பெற்ற
மைந்தர்கள் நான்மறைக் கொப்பான நால்வர் என்பது கருத்து.        6