வேள்விப் படலம் - 421
படைக்கலங்கள் இராமபிரானுக்குப் பணிபுரிய முன்வருதல்
421.
‘மேவினம்; பிரிதல் ஆற்றேம்;
வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும்.
இளையவன் போல’ என்று
தேவர்தம் படைகள் செப்ப.
‘செவ்வியது’ என்று அவனும் நேர.
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில்
புரிந்த அன்றே.
வீர! மேவினம் பிரிதல் ஆற்றேம் - வீரனே! நாங்கள் வந்து
உன்னை அடைந்தோம். பிரிதல் செய்யோம்; நீ விதியின் எம்மை
ஏவின செய்து - நீ முறைப்படி எங்களை ஏவிட்ட காரியத்தைச்
செய்து; இளையவன் போல நிற்றும் என்று - இளையவனாகிய
இலக்குவனைப்போலப் பணிபுரிந்து நிற்போம் என்று படைக்கலத்
தேவதைகள் கூற; அவனும் செவ்விது என்று நேர - இராமபிரானும்
நல்லது. என்று ஒப்புக்கொள்ள; பூவை போல் நிறத்தினாற்கு -
காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட இராமபிரானுக்கு; புறத்தொழில்
புரிந்த - ஏவல் தொழிலைச் செய்திருந்தன.
மேவினம். ஆற்றேம் என்பன தன்மைப் பன்மை வினைமுற்றுகள்.
பிரிதல்: தொழிற்பெயர். விதியின் முறைப்படி. நிற்றும்: செவ்விது:
அழகிது. நேர: ஒப்ப. பூவை: காயாம்பூ. புறத்தொழில்: ஏவல் தொழில்.
தெய்வப்படைக் கலங்களுக்குரிய தேவதைகள் இராமனை நோக்கி
‘’வீரனே! நாங்கள் உன்னை அடைந்தோம். இனிப்பிரிய மாட்டோம். நீ
ஏவிய பணியைச் செய்து இலக்குவனைப் போல. நிற்போம் என்.
இராமனும் அழகிது என்று ஒப்புக் கொள்ள - அப்படைக்கலத்
தேவதைகள் இராமனுக்கு ஏவல்தொழிலைச் செய்திருந்தன என்பது
பொருள். 3
