விவேகானந்தருக்கு தெளிவைத் தந்த சூர்தாஸின் பாடல்
அரசவையில் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சிக்கு ஜெய்ப்பூர் மகாராஜா, விவேகானந்தரை அழைத்து இருந்தார். விவேகானந்தர் யார் பாடுகிறார்கள் என்று கேட்டார். ஒரு நடனப் பெண்மணி பாடப் போகிறாள் என்பதை விவேகானந்தர் அறிந்து கொண்டதும், துறவியாகிய தாம் அதற்குப் போவது உசிதமில்லை என்று எண்ணினார். ஆகையால் அரசவைக்குச் செல்லவில்லை. அரண்மனையிலே ஓர் அறையிலே இருந்தார்.
அரசவையில் நிகழ்ச்சி தொடங்கியது. விவேகானந்தரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு இருந்தாள் அந்த நடனப் பெண்மணி. அவர் வர மறுத்துவிட்டார் என்பதை அறிந்ததும் அவளுடைய உள்ளம் வேதனை அடைந்தது. அதன் காரணமாக அவளுடைய உள்ளத்தின் சோகம் எதிரொலித்தது. அவள் ஒரு பாடல் பாட அந்தப் பாடலிலும் அதே கருத்து அமைந்து இருந்தது. அது சூர்தாஸ் என்ற ஞானி எழுதிய ஒரு பாடல்.
அவளது பாடல் வரிகளில் கீழ்க்கண்ட கருத்து பொதிந்து இருந்தது. "கருமானிடம் ஓர் இரும்புத் தகடு இருந்தது. இரு வேறு பொருட்கள் செய்வதற்காக அதனை அவன் இரு துண்டுகள் ஆக்கினான். ஒரு பகுதி கூறிய கத்தியாகி கசாப்புக் கடையில் உயிர்களை கொல்லும் தொழில் செய்தது. மற்றொன்று ஆலயக் கொடிமரத்தின் அடிப்பட்டையாக மாறியது அதனை மக்கள் தொட்டு வணங்கினார்கள். இரும்பு ஒன்று தான்! ஆனால் அதன் இரு வேறு பகுதிகள், விதி வசத்தாலும், அவை இருந்த சூழ்நிலை காரணமாகவும் இரு வேறு நிலைகளை அடைந்தது. இதில் இரும்பின் குற்றம் ஏதேனும் உள்ளதா?"
அக்கவிதையை கேட்டவுடன்,விவேகானந்தரின் இதயம் இளகியது. உண்மைதான்! அடிப்படையில் எல்லா மனிதர்களும் புனிதமானவர்கள் தான். பிழைப்புக்காக பொது மேடையில் ஆடும் பெண், குடும்பப் பெண்ணை விட எந்த வகையிலும் தாழ்ந்தவள் அல்ல. வாழ்க்கையின் நிர்பந்தங்களும், அவர், அவர் இருக்கும் சூழலும் தான் உயர்வு, தாழ்வு என்ற போலியான எண்ணங்களை உருவாக்குகிறது. என்ன உயர்ந்த கருத்துள்ள கவிதை இது! எனத் தெளிந்தார் அவர்.
அக்கணமே விவேகானந்தர் தம் அறையை விட்டு வந்து இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விரைந்தார்.
எல்லோரையும் ஒரே கண்ணோட்டத்துடன் காண வேண்டும் என்ற விதியை மீறிய தமக்கு அப்பெண்மணியின் பாடல் புதிய பாடத்தைத் தந்து விட்டது. என்று விவேகானந்தர் எண்ணி அப்பெண்மணியை நோக்கினார். அவளை அம்பிகையாகக் கருதினார். அவளுடைய இசையானது தமது அறிவிலே தெளிவைத் தந்தது. என்று புகழ்ந்து உரைத்தார்.
விவேகானந்தரின் வருகையே தன்னை ஆசிர்வதித்தாகக் கூறி, அப்பெண்மணி அவரை வணங்கினாள்.
