விவேகானந்தருக்கு காளி கொடுத்த உத்தரவு
மேலை நாடுகளில் சென்று பாரத நாட்டின் பெருமையைக் கூறி அது உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற பேரார்வம் சுவாமிஜியின் உள்ளத்தில் பல நாட்களாக உறங்கிக் கொண்டு இருந்தது.
சிகாகோ நகரில் நடைபெற இருக்கும் சமைய மகா நாட்டிற்கு சுவாமிஜி சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று இமயம் முதல் குமரி வரையில் இருந்த அவருடைய அன்பர்களும் ஆதரவாளர்களும் விருப்பம் தெரிவித்தார்கள்.
சுவாமிஜியோ தம்மைத் தாமே சோதித்துக் கொண்டார். தம்மால் இத்தகைய அறிய செயலைச் செய்ய இயலுமா? தூர தேசத்தில் சென்று பிற மதத்தினரின் முன்னாள் அவர்கள் அறிந்திராத புதிய புதிய உண்மைகளைக் கூறும் வல்லமை தமக்கு இருக்கிறதா என்ற கேள்விகள் கேட்டுக் கொண்டார்.
வெளிநாடு போக வேண்டும் என்றாள் அம்பிகை நேரில் தரிசனம் தந்து உத்தரவு தர வேண்டும். அதன் பிறகு தான் பயணம் மேற்கொள்வது என்று பிடிவாதமாக சுவாமிஜி இருந்தார். அவருடைய பயணத்திற்காக பலர் உதவி செய்ய முன் வந்த போது கூட அவற்றை அவர் ஏற்கத் துணியவில்லை.
ஒரு நாள் விழிப்பும் உறக்கமும் இல்லாத இடைநிலையில் சுவாமிஜி துயில் கொண்டு இருந்தார்.
அவருடைய கண் முன்னே கடற்கரை மணல் பரப்பு. அந்த வெண் பரப்பில் குருதேவர் தோன்றி நடந்து சென்று கடலுக்குள் கால் பதித்தார். கடலில் சென்று கொண்டே சுவாமிஜியைப் பார்த்து "நீயும் போ, போ" என்று கூறிக் கொண்டே சென்றார்.
குருதேவர், காளிமாதா அல்லவா? அம்பிகையை சுவாமிஜி ஆசாரியர் வடிவிலே கண்டார். அவள் கட்டளை காதுகளில் ஒலித்தது. காளிமாதாவே கட்டளையிட்டதை உணர்ந்தார். அக்கணமே காளியின் கட்டளையை ஏற்றார்.
இக்காட்சிக்குப் பிறகு – அம்பிகையின் அருளாசியைப் பெற்ற பிறகு தான் சுவாமிஜி அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்தார்.
