வால்மீகி இராமாயணத்தின் அமைப்பு
இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும்.
வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:
- பால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.
- அயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி.
- ஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும்.
- கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை.
- சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.
- யுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.
- உத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.
இந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.
