வரைக்காட்சிப் படலம் - 973

bookmark

பல்வகையொலி மிகல்

பலவகை ஓசைகள்
 
973.

புதுக் கொண்ட வேழம் பிணிப்போர்
   புனை பாடல் ஓதை.
மதுக் கொண்ட மாந்தர்
   மடவாரின் மிழற்றும் ஓதை.
பொதுப்பெண்டிர் அல்குல்
   புனை மேகலைப் பூசல் ஓசை.
கதம் கொண்ட யானை
   களியால் களிக்கின்ற ஓதை.
 
புதுக்  கொண்ட -  பழகிய  யானைகளைக்  கொண்டு  கொப்பத்து
வீழ்த்திப்  பிடித்த  புதிய;   வேழம் - கதம் மிக்க களிற்றி யானையை;
பிணிப்போர்  -  தம்  வயப்படுத்தக் கருதிய பாகர்கள்; புனை - தாம்
புதுவதாகப்  புனைந்த;  பாடல்  ஓதை  -   பாட்டின் ஓசையும்; மதுக்
கொண்ட மாந்தர் - கள் மிகுதியாகப் பருகிய ஆண்கள்; மடவாரின் -
தம்  உரிமை  மகளிரிடத்து;  மிழற்றும் - காமக்குறிப்பு தோன்ற பேசும்
(குழறல்.  உளறல்);  ஓதை - ஓசையும்; பொதுப்பெண்டிர் - வேசையர்;
அல்குல்  புனை  -  தம்  இடையில் அணிந்த; மேகலை - கிண்கிணி
பொருந்திய  மேகலையினால்   எழுப்பும்;  பூசல்  ஓதை  - சலசலப்பு
ஒலியும்; கதம் கொண்ட யானை - மதவெறி மிக்க களிறுகள்; களியால்
-  செருக்கு  மிகையால்; களிக்கின்ற - பிளிறுகின்ற; ஓதை - ஓசையும்
அப்பாடி நகரில் எழுந்தன. 

யானை  வீழ்த்தும் பாகர்கள் தொழிலில் திறம் மிக்கவர். சினம் மிக்க
யானைகளின்  சினம்  தணிவித்துப்  பெரிய   கம்பத்திலே  சேர்த்தற்கு
விரவு  மொழி  பயில்வர்  (மலைபடு 326) வயப்படுத்த இசைப்பாடல்கள்
பாடவும்  செய்வர்.  கருங்களிற்று   ஒருத்தலும்.  கனிந்த அவ்விசைக்கு
வயப்படும்  என  கலித்தொகை  கூறும்.  பொதுப்  பெண்டிர் தம்  இல்
புக்காரை.   அவர்கள்   விடுதல்   அறியா விரும்பினர்   ஆகி   தம்
ருங்கின்       நீங்கா        வகை        மாயப்பொய்     செயல்
பல  கூட்டுவர்.  கால்களில்  தண்டை  கைகளில் குலுங்கு வளையல்கள்.
மேகலையின்  கிண்கிணி   சேர்த்துவர்.  அவர்தம்  மெய் இயக்கத்தால்.
இவற்றால்  இன் ஒலி எழும். காம  மயக்கத்தால்.  கள்ளுண்ட வெறியால்
ஆடவர்  உரத்த குரலில் பேசுவர்.  அக்குளறல்  மொழிகளும் களிற்றின்
பிளிற்றொலியும் கலந்து எழுந்து நிறைந்தன அப்பாடி நகரில் என்க.  46