வரைக்காட்சிப் படலம் - 967

bookmark

இருள் பரத்தல்

இருளும் தீப ஒளியும்
 
967.

கால் வானகத் தேருடை வெய்யவன்.
   காய் கடுங் கண்
கோல் மாய் கதிர்ப் புல் உளைக்
   கொல் சினக் கோள்அரிம்மா.
மேல்பால் மலையில் புக. வீங்கு இருள்.
   வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என. வந்து
   பரந்தது அன்றே.
 
வானகம்- வானத்தில் உலாவுகின்ற; கால் தேர் உடைய - ஒற்றைச்
சக்கரத்  தேரையுடைய; வெய்யவன் - சூரியனாகிய; காய் கடுங்கண் -
எரிக்கக்கூடிய  கொடிய  கண்களையும்;  கோல்  மாய் கதிர் - எய்யும்
அம்பு மறைந்து  விடுவதற்கு  இடமான  கதிர்களாகிய;  புல்  உளை -
புல்லிய    புற    மயிர்களையும்;   கொல்சினம்   -   கொல்லவல்ல
சினத்தையும்;   கோள் அரிம் மா - மிடுக்கையும் உடைய சிங்கமானது;
மேல்  பால் மலையில்  புக  -  மேற்குத்  திசையிலுள்ள  மலையில்
புகுந்ததால்; வீங்கு  இருள்  -  மிக்க  இருளானது;  வேறு இருந்த -
தனியாகப்  பதுங்கியிருந்த;  மால்  யானை  -  பெரிய யானைகளின்;
ஈட்டம் என - கூட்டம்போல்; வந்து பரந்தது - வந்து பரவிற்று. 

சிங்கமானது     வேறு  மலைக்குச் சென்றுவிட்டதால் பதுங்கியிருந்த
யானைக்  கூட்டம்  பிறகு   வெளிவருவதுபோலச்  சூரியன்  மறையவே
இருள்  எங்கும் பரவியது என்பது -  உருவகமும்  உவமையும்  சேர்ந்து
வந்தன.    வெய்யவனை    அரிமா    என்றதற்கு   ஏற்ப   அவனது
வெப்பத்தைக் காய்கடுங்  கண்ணாகவும்.  அவனுடைய கதிர்களை உளை
மயிராகவும்  உருவகம்  செய்தார். ‘கால் வானகத்  தேருடை’  - சிங்கம்:
காலிலும்  வாலிலும்  நகத்திலும்   அழகுடைய:  ‘கோல்  மாய்   கதிர்ப்
புல்லுளை’  -  எய்யும்   அம்புகளை   மறைக்கும்  புல்லிய  புறமயிர்ச்
செறிவுடைய  -  சிலேடை  உருவக   அணி.   அரிம்மா  -  விரித்தல்
விகாரம்.                                                  40