வரைக்காட்சிப் படலம் - 965

bookmark

965.

கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய
   காட்சி யாலும்.
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு
   சிரங்க ளாலும்.
வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம்
   மார்பு அணிந்த
அண்ணல் கரியோன்தனை ஒத்தது -
   அவ் ஆசு இல் குன்றம்.*
 
கண்ணுக்கு இனிது ஆகி- கண்களுக்கு அழகுடையதாகி; விளங்கிய
காட்சியாலும் -  தோன்றுகின்ற  தோற்றப்  பொலிவாலும்; எண்ணற்கு
அரிது ஆகி - எண்ணுவதற்கு அரிதாகுமாறு; இலங்கு சிரங்களாலும் -
(ஆயிரக்  கணக்கில்)  விளங்கும்   முடிகளாலும்;  வண்ணம்  - அழகு
சேர்ந்ததாகிய;  கொழுஞ்  சந்தனச்  சேதகம்  -  வளமான  சந்தனக்
குழம்பை;  மார்பு  அணிந்த  -  (தன்) மார்பில் அணிந்த; அண்ணல்
கரியோன்தனை  -  பெருமையுள்ள  திருமாலை;  அவ்  ஆசு இல் -
அந்தக்   களங்கம்   இல்லாத;   குன்றம்   ஒத்தது  -  குன்றமானது
ஒத்திருந்தது.

கண்ணிற்கு     இனிய  காட்சியாலும்  முடி ஆயிரத்தாலும் சந்தனம்
மார்பில்  அணிந்ததாலும்  சந்திர  சயில   மலை  திருமாலை  ஒத்தது
என்றார். மலைக்குச் சிரம்: சிகரம். மார்பு: நடுவிடம்.               38