வரைக்காட்சிப் படலம் - 964
அந்தியில் சந்திர சைலத்தின் தோற்றம் (964-965)
964.
திணி ஆர் சினை மா மரம் யாவையும்
செக்கர் பாய.
தணியாத நறுந் தளிர் தந்தன
போன்று தாழ.
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின்.
அங்கம் எங்கும்.
மணியால் இயன்ற மலை ஒத்தது -
அம் மை இல் குன்றம்.
திணி ஆர் சினை - வலிமையான கிளைகள் கொண்ட; மா மரம்
யாவையும் - பெரிய மரங்கள் யாவும்; செக்கர் பாய - செவ்வானத்தின்
ஒளி வீசுவதால்; தணியாத நறுந்தளிர் - குறையாத சிறந்த தளிர்கள்;
ஈன்றன போன்று தாழ - புதிதாகத் தழைத்தன போல விளங்க;
அங்கம் எங்கும் - தன்னுடல் முழுவதும்; அணி ஆர் ஒளி - அழகிய
அந்தச் செந்நிற ஒளி; வந்து நிரம்பலின் - வந்து நிறைவதால்;
அம்மை இல் குன்றம் - குற்றமற்ற அந்த மலையானது; மணியால்
இயன்ற - செந்நிறமுள்ள மணிகளால் இழைக்கப் பெற்றுள்ள; மலை
ஒத்தது - மலையை ஒத்தது.
செவ்வானம் வீசப் பெறுவதால் செந்தளிர் புதிதாக உண்டாகப்
பெற்றால் போன்ற பல மரங்கள் கவிந்த அந்தச் சந்திரசயிலம்
செம்மணி கொண்டு இழைக்கப் பெற்றது போல் விளங்கிற்று என்பது -
தற்குறிப்பேற்றவணி. 37
