வரைக்காட்சிப் படலம் - 963
அந்தி மாலை வருணணை
அந்திக் காலத்தில் மலைக்காட்சி
963.
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெஞ் சாயையுடைக் கதிர். அங்கு. அதன்மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய. ஏறு
செஞ் சோரி எனப் பொலிவுற்றது. செக்கர் வானம்.
மஞ்சு ஆர் மலை - மேகம் தங்கிய அந்த மாலையானது; வாரணம்
ஒத்தது - யானையைப் போன்றுள்ளது; வானின் ஓடும் - வானத்தில்
விரைந்து செல்லுகின்ற; வெம் சாயை உடை - வெப்பமான
கதிர்களையுடைய; கதிர் - சூரியன்; அதன் மீது பாயும் - அந்த
யானைமேல் பாய்கின்ற; பஞ்சானனம் ஒத்தது - சிங்கத்தையொத்தது;
செக்கர் வானம் - செவ்வானமானது; அது பாய ஊறும் - அச்சிங்கம்
(யானைமேல்) பாய்ந்ததால் சுரக்கின்ற; செஞ்சோரி என - சிவந்த
இரத்தம் போல; பொலிவுற்றது - விளங்கியது.
அந்திப் பொழுது உண்டாகச் சூரியன் மலையைச் சேரச்
செவ்வானம் தோன்றியது. இதனை ஒரு யானை மீது சிங்கம்
பாய்ந்ததால் எங்கும் இரத்தம் ஊறியதைப் போன்றது என்று
வருணித்தார்- தன்மைத் தற்குறிப்பேற்றவணி. 36
