வனம் புகு படலம் - 2127
2127.
வறுத்து வித்திய அனையன
வல் அயில் பரல்கள்,
பறித்து வித்திய மலர் எனக்
குளிர்ந்தன; பசைந்த;
இறுத்து எறிந்தன வல்லிகள்
இளந் தளிர் ஈன்ற;
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு
அமுது உகக் களித்த;
வறுத்த வித்திய அனையன வல் அயில் பரல்கள் - நெருப்பில்
வறுத்து விதைக்கப்பட்டன போன்ற கொடிய கூர்மையான பரற்கற்கள்;
பறித்து வித்திய மலர் எனக்குளிர்ந்தன - பிடுங்கி விதைத்த
மலர்களைப் போலக் குளிர்ச்சி அடைந்தன; பசைந்த-ஈரம் உடையவாயின;
இறுத்து எறிந்தன வல்லிகள் - ஓடிக்கப்பட்டு எறியப்பட்ட கொடிகள்;
இளந் தளிர் ஈன்ற - இளமையான தளிரைத் தந்தன; கறுத்த வாள்
அரவு -சீறிய கொடிய பாம்பு; எயிற்றினூடு அமுது உகக் களித்த -
பற்களின் இடையே இருந்துஅமுதம் சிந்தச் சீற்றம் நீங்கி மகிழ்ச்சி
அடைந்தன.
பரற்கற்கள் மலராக, காய்ந்த கொடிகள் தளிர் ஈன, பாம்பு நஞ்சு
தராமல் அழுதம் சித்தஇவ்வாறு பாலை மாறியது என்பதாம். 40
