வனம் புகு படலம் - 2111
பரத்துவாசன் வினவுதல்
2111.
‘அகல் இடம் நெடிது ஆளும்
அமைதியை; அது தீர,
புகல் இடம் எமது ஆகும்
புரையிடை, இது நாளில்,
தகவு இல தவ வேடம்
தழுவினை வருவான் என் -
இகல் அடு சிலை வீர! -
இளையவனொடும்?’ என்றான்.
‘இகல் அடு சிலை வீர! - பகையை அழிக்கின்ற வில்லை ஏந்திய
வீரனாகியஇராமனே!; அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை- பரந்த
இவ்வுலகம் முழுமையும் நீண்ட காலம்ஆளக்கூடிய தகுதியை உடையாய்;
அது தீர - அத்தன்மை நீங்க; இது நாளில் -இப்போது; புகல் இடம்
எமது ஆகும் புரை இடை - எம்போன்ற தவமுனிவர்கள் தங்கிவாழும்
இடமாகிய குகைகள் உள்ள வனத்திடத்து; தகவு இல தவ வேடம் - உன்
தன்மைக்குப்பொருந்தாத தவத்தோர் வேடத்தை; இளையவனொடும் -
இலக்குவனோடும்; தழுவினை -மேற்கொண்டவனாய்; வருவான் என்?
‘என்றான் - வருவதற்கு என்ன காரணம்’ என்றுவினவினான்.
அரச குமாரனாகிய இராமனுக்கு மரவுரியும் சடைமுடியும் ஆகிய
தவக்கோலம் பொருந்தாது என்றுகருதி. ‘தகவு இல தவ வேடம்’ என்றார்
என்பதாம். புரை - குகை. முனிவர்கள் குகைகளில் தங்கிவாழ்தல் பழக்கம்.
அவை உள்ள இடம் காடு ஆகும். 24
