வனம் புகு படலம் - 2105
2105.
‘பூ நனை சினை துன்றி,
புள் இடை இடை பம்பி,
நால் நிற நளிர் வல்லிக்
கொடி நவை இல பல்கி,
மான் இனம், மயில் மாலை,
குயில் இனம், வதி கானம் -
தீ நிகர் தொழில் ஆடைத்
திரை பொருவன - பாராய்!’
மான் இனம் - மான் கூட்டங்கள்; மயில் மாலை- மயில் வரிசைகள்;
குயில் இனம் - குயில் தொகுதிகள்; வதி - சஞ்சரிக்கின்ற; கானம் -
இந்தக் காடானது; பூ நனை சினை துன்றி - பூவும் அரும்பும் உடைய
கிளைகள்நெருங்கப்பெற்று; நால் நிற நளிர் வல்லிக் கொடி - பலவகை
நிறமுள்ள குளிர்ந்தவல்லியென்னும் கொடிகள்; நவை இல பல்கி - குற்றம்
இல்லாதன நிரம்பப் பெற்று; தீ நிகர் - நெருப்பை ஒத்த; தொழில் -
சித்திரத் தொழில் செய்யப் பெற்ற; ஆடைத் திரை - திரைச் சீலையை;
பொருவன - ஒத்திருப்பனவற்றை; பாராய் -
பூங்கொடி, பறவை, பன்னிறக் கொடிகள் நிரம்பியிருத்தலின் காடு
வண்ண வேலைப்பாடமைந்ததிரைச் சீலையை ஒத்தது என்க. “வித்தகர்
இயற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச்செய்கைப் படா அம்
போர்த்ததுவே, ஒப்பத்தோன்றிய உவ வனம்” (மணி. 3:167 -169) என்ற
வரிகளை இதனோடு ஒப்புநோக்குக; ‘தீ’ என்பது புத்தி என்னும்
பொருள்படும் வடசொல்லாகக்கொண்டு கூறுவார் உளர். அது ‘நிகர்’
என்னும் உவமைச் சொல்லோடு ஏலாமை அறிக. பெரிதும்செந்றிறம்
படைத்த கானம் ‘தீ’ நிகர்ந்தது எனலே பொருந்துவதாம். 18
