வனம் புகு படலம் - 2101

bookmark

2101.    

‘கன்னியர் அணி கோலம்
     கற்று அறிகுநர் என்ன,
பொன் அணி நிற வேங்கை
     கோங்குகள், புகு மென் பூ,
அன்ன மென் நடையாய்! நின்
     அளக நல் நுதல் அப்பும்
சின்ன மென் மலர் மானச்
     சிந்துவ பல - காணாய்!

     அன்னம் மென் நடையாய்! - அன்னப் பறவை போன்ற மெல்லிய
நடையை உடையவளே!; பொன் அணி நிற வேங்கை,  கோங்குகள் -
பொன் போன்ற அழகிய நிறம்படைத்த வேங்கைமரமும் கோங்க மரமும்;
கன்னியர் அணிகோலம் கற்று அறிகுநர் என்ன - கன்னிப்பெண்கள்
அணிகின்ற அழகுக் கலையைக் கற்றுப் பழகுபவர்களைப் போல; புது மென்
பூ -புதிய மென்மையான பூக்களை;  நின் அளக நல் நுதல் அப்பும் -
உன்னுடைய கூந்தலோடு கூடிய நல்ல நெற்றியிலே அப்புகின்ற;  சின்னம்
மென் மலர்மான- விடு பூக்களாகிய மெல்லியமலரை ஒப்ப; சிந்துவ பல-
சிதறுகின்ற பலவற்றையும்;  காணாய் -.

     கோலம் செய்வாற்நெற்றியில் மலர் அப்புதல் வழக்கு.சின்னம் - விடு
பூ. (உதிரிப் பூக்கள்.) கோங்கு, வேங்கை இரண்டும் பொன்னிறம்  வாய்ந்த
மலர்களை உடையவை. குழலில்வேங்கையும் கோங்கும் அணிவர்
என்பதை, “நின் குழல் வேங்கையம்போதொடு கோங்கம் விராய்”
என்பதனுள் (திருக்கோவையார். 205)காண்க.                     14