வனம் புகு படலம் - 2099
2099.
‘முற்றுறு முகை கிண்டி,
முரல்கில சில தும்பி,
வில் திரு நுதல் மாதே!
அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறு மலர் ஏறித்
துயில்வன, சுடர் மின்னும்
பொன் தகடு உறு நீலம்
புரைவன பல - காணாய்!
வில் திரு நுதல் மாதே! - வில்லைப் போன்ற அழகிய நெற்றியை
உடைய பெண்ணே!; சில தும்பி - சில வண்டுகள்; அம் மலர் விரி
கோங்கின் - அழகிய மலர்கள்விரிந்துள்ள கோங்க மரத்தினது; முற்றுறு
முகை கிண்டி - முற்றிய அரும்புகளைக் குடைந்து(தேன் உண்டு);
முரல்கில - பாடாதனவாய்; சுற்று உறு மலர் ஏறி - வட்டமாகப்
பொருந்திய மலரில் ஏறி; துயில்வன பல - உறங்குகின்றன பலவும்; சுடர்
மின்னும் - ஒளிவிட்டு விளங்குகின்ற; பொன் தகடு உறு- பொன் தகட்டில்
பொருந்திய; நீலம் புரைவன- நீல மணியை ஒத்துள்ளனவற்றை; காணாய்-.
முற்றுறு முகை - மலரும் பருவத்தரும்பு. அதனையே தேனீக்கள்
குடைதல் இயல்பு. கோங்கமலர்பொன்னிறம் படைத்தது. கோங்க மலரில்
உறங்கும் வண்டு பொன்னில் பதித்த நீலமணிபோல் உள்ளது. 12
