வனம் புகு படலம் - 2089
இராமன் சென்ற வழியின் இயல்பு
2089.
வெயில், இள நிலவேபோல்,
விரி கதிர் இடை வீச,
பயில் மரம் நிழல் ஈன,
பனி புரை துளி மேகப்
புயல் தர, இள மென் கால்
பூ அளவியது எய்த,
மயிலினம் நடம் ஆடும்
வழி இனியன போனார்.
வெயில் - சூரியன்; விரி கதிர் - பிரிந்த தன் கிரணங்களை; இள
நிலவே போல் இடைவீச - இளமையான நிலவொளி போலத் தண்மையாக
இடையிடையே வீசவும்; பயில் மரம் - (வனத்தில்) நெருங்கியுள்ள மரங்கள்;
நிழல் ஈன - நிழலைத்தரவும்; மேகப் புயல் - மேக மழை; பனி புரை
துளிதர - பணியை யொத்தகுளிர்ந்த சிறிய துளிகளைத் தரவும்; இளமென்
கால் - இளைய மெல்லிய தென்றற்காற்று; பூ அளவியது எய்த - பூக்களின்
நறுமணங்களோடு கலந்து வந்து அடையவும்; மயில் இனம்நடம் ஆடும் -
மயிற்கூட்டங்கள் நடனம் ஆடுகின்ற; இனியன வழி - இனிமையாகிய
வழிகளில்; போனார் - மூவரும் சென்றார்கள்.
வெயிலொளி நிலவொளிபோல வீசுதல், மரம் நிழல் தருதல்,மேகம்
சிறுநீர்த் திவலை சிந்தல், தென்றல் பூமணத்தோடு வீசுதல், மயில்கள் நடனம்
ஆடுதல்ஆகியவற்றால் இவர்கள் செல்லும் வழிகள் களைப்புத் தராது
இனியனவாயின. 2
