ரேனாண்டு சோழர்கள்

bookmark

களப்பிரர் ஆட்சி காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், சோழ இளவரசர்கள் சிலர் தமிழகத்தை விட்டு வெளியேறித் தெலுங்கு, கன்னட நாடுகளுக்குச் சென்று குடியேறி ஆட்சியை நிறுவினார்கள். இவர்கள் ரேனாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு சென்ற சோழர்கள் கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களில் குடியேறி 'ரேனாண்டு சோழர்கள்' என்று சிறப்புப் பெற்று விளங்கினர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.

மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோம் .கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விந்தன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.

'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.