மோசே

மோசே

bookmark


மோசே அல்லது மோயீசன் (எபிரேயம்: מֹשֶׁה‎, Modern Moshe Tiberian Mōšéh ISO 259-3 Moše ; அரபு மொழி: موسى Mūsā ) என்பவர் எபிரேய விவிலியம், திருக்குர்ஆன் மற்றும் பகாய் சமய நூல்களின் படி ஒரு இறைவாக்கினரும் சமயத்தலைவரும், சட்டம் அளித்தவரும் ஆவார். மரபுப் படி இவரே தோராவை எழுதியவராவார். ஆபிரகாமிய சமயங்களில் இவர் மிகவும் குறிக்கத்தக்கவராவார்.

தொல்பொருளியளாலர்களிடையே விடுதலைப் பயணம் குறித்தும், மோசேயின் வரலாற்றுத் தன்மைக் குறித்தும் ஒத்தக்கருத்தில்லை. பலர் இதனை வெண்கலக் காலத்தின் முடிவில் இசுரயேலர்களால் காணான் நாட்டில் இயற்றப்பட்ட புனைவுக் கதையாகக் கருதுகின்றனர்.

விடுதலைப் பயண நூலின் படி இவர் இசுரயேலர் எகிப்தில் அடிமைப்பட்டிருந்த போது பிறந்தவர். அக்காலச்சட்டப்படி குழந்தையினைக் கொல்ல மனம் வராத அதன் தாய், அதனை ஒரு கூடையில் இட்டு நைல் நதியில் அனுப்பினார். கூடை எகிப்தின் அரசியால் கண்டெடுக்கப்பட்டு மோசே அவரின் தத்துப் பிள்ளையாக வளர்க்கப்பட்டார். ஒரு எகிப்தியனைக் கொன்றதற்காக மிதியான் நாட்டில் பதுங்கியிருந்த இவருடன் "எரியும் முட்செடி" வழியாக யாவே கடவுள் பேசி எகிப்தியரை விடுவிக்க இவரை அனுப்பிவத்ததாக நம்பப்படுகின்றது. மேலும் எகிப்தியரை விடுவித்து வரும் வழியில் சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கடவுளிடமிருந்து பெற்று இசுரயேலர்களுக்கு இவர் அளித்தார் எனவும் வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழையாமலேயே இவர் இறந்தார் எனவும் விவிலியம் விவரிக்கின்றது.

மோசேவும் பத்துக் கட்டளைகளின் கற்பலகைகளும் :-

பாரம்பரிய யூத மதத்தின் படி மோசேயின் காலம் கி.மு 1391–1271 வரை உள்ளதாக நம்பப்படுகின்றது; 4ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த புனித ஜெரோம் கி.மு 1592. என்றும் 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த உஷ்சர் கி.மு 1619 என்றும் இவரின் பிறப்பு ஆண்டினைக் கணிக்கின்றனர்.

விவிலியத்தில் மோசே:-

கிறிஸ்தவ விவிலியத்தின் யாத்திராகமம் நூலில் மோசேயின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. இதன் படி மோசேயின் தந்தை அம்ராம் ஆவார் அவரது தாய் யோகெபேத் ஆவார். மோசே இஸ்ரவேலின் லேவி எனப்பட்ட குருத்துவ குலத்தில் பிறந்தார். மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்தில் அவர்களது அடிமை வாழ்விலிருந்து விடுவித்து பாலைவனமூடாக இஸ்ரவேல் மக்களை கானான் நாடு நோக்கி (தற்போதைய இஸ்ரவேல் பலஸ்தீன நாடுகள் உள்ள பிரதேசம்) வழி நடத்தி சென்றார். மேலும் வழியில் கடவுள் சீனாய் மலை மீது இறைவனது திருச் சட்டத்தை கொடுத்தார். இச்சட்டமே இயேசு வரும் வரைக்கும் மாற்றமின்றி பயன்படுத்தப்பட்ட சட்டமாகும். மோசே வாழ்ந்த காலம் பற்றிய கணக்கீடுகளின் படி மோசே கி.மு. 13 - 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே வாழ்ந்ததாக கருதப்படுகிறது.

மோசே ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை முதன் முதலாக எடுத்து கூறியவராவார். இது கடவுள் மோசே மூலமாகக் கொடுத்த பத்து கட்டளைகளில் முதலாவதாகும். மோசே கிறிஸ்தவ, இஸ்லாம், யூத, மற்றும் பஹாய் சயங்களில் ஒரு முக்கிய தீர்க்கதரிசியாகக் கொள்ளப்படுகிறார்.

மோசேயின் பிறப்பும் குழந்தைப் பருவமும்:-

மோசே, இஸ்ரவேலர் எகிப்தில் பார்வோன் அரசனின் ஆட்சியில் அடிமைகளாக இருக்கும் போது ஒரு அடிமை பெற்றோருக்கு பிறந்தார். அச்சமயம் இஸ்ரவேலரின் சனத் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பார்வோன் எகிப்தில் ஒரு சட்டத்தைப் பிறப்பித்திருந்தான். அதன் படி இஸ்ரவேலருக்குப் பிறந்த சகல ஆண் குழந்தைகளும் நைல் நதியில் வீசி கொலை செய்யப்பட வேண்டும். விவிலியத்தில் இந்த பார்வோ யார் என குறிப்பிடப்படவில்லை. அனால் ஆய்வாளரின் கருத்துப்படி மூன்றாவது துட்டுமோஸ் (Thutmose III) அல்லது இரண்டாம் ரம்சீஸ் (Ramses II) என கருதப்படுகிறது.

மோசே பிறந்தவுடன் அவரது தாய், குழந்தை அழகுள்ளது எனக்கண்டு, குழந்தையை நதியில் எறிய மனதில்லாது ஆறு மாதம் வரை குழந்தையை வீட்டில் ஒளித்து வைத்தார். மேலும் குழந்தையை ஒளித்து வைக்கக் கூடாமல், ஒரு நாணற் பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையைக் கிடத்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். குழந்தைக்கு என்ன நடக்கும் என்பதை அறியும் படி அதன் தமக்கை தூரத்திலே நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் நீராட வந்தாள் அவளுடைய தாதிகள் நதியோரத்தில் இருந்தார்கள். இளவரசி நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும் படி செய்தாள். அதைத் திறந்த போது பிள்ளையைக் கண்டாள் பிள்ளை அழுதது அவள் அதின் மேல் இரக்கமுற்று, இது அடிமைகளாக இருக்கும் இஸ்ரவேல் பிள்ளைகளில் ஒன்று என ஊகித்துக் கொண்டாள்.

அப்பொழுது இதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் தமக்கை பார்வோனின் மகளை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும் படி இஸ்ரவேல் பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக் கொண்டு வரட்டுமா? என்றாள். அதற்கு இளவரசி இணங்கவே அவள் போய் குழந்தையின் தாயையே அழைத்துக் கொண்டு வந்தாள். பின்னர் இளவரசி குழந்தயை அவளிடம் கொடுத்து குழந்தை பால் மறக்கும் வரை வளர்க்கும் பொறுப்பை கொடுத்தார். அதற்காகச் சம்பளமும் கொடுத்தாள். அப்படியே குழந்தை தன் சுய தாயிடமே வளர்ந்தது. பிள்ளை பெரியவனான போது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடத்தில் கொண்டு போய் விட்டாள். பார்வோனுடைய மகள் அவனை நீரிலிருந்து எடுத்தேன் என்று பொருள்படும் படி, குழந்தைக்கு மோசே என்று பெயரிட்டாள்.

கிறித்தவத்தில்:-

விடுதலைப்பயணம் விடுத்து பிற பழைய ஏற்பாடு நூல்கள் அனைத்தயும் விட மோசே புதிய ஏற்பாடு நூல்களில் அதிகம் குறிக்கப்படுகின்றார். கிறித்தவத்தில், இவர் இறை சட்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றார். இது இயேசு கிறித்துவின் போதனைகளில் வெளிப்படுகின்றது. புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் இயேசுவின் நற்செய்தியினை விளக்க இயேசுவின் செயல்களையும் மோசேயின் வார்த்தைகளையும் அடிக்கடி ஒப்புமை படுத்தியுள்ளனர். திருத்தூதர் பணிகள் 7:39–43, 51–53,இல் இசுரயேலரின் மூதாதையர் மோசேவுக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளியதும் கன்றுக் குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தியதும் இயேசுவின் நற்செய்தியினை ஏற்க மறுப்பவரோடு ஒப்பிடப்படுகின்றது.

இயேசுவின் போதனைகள் பலவற்றிலும் மோசே இடம் பெற்றுள்ளார். யோவான் நற்செய்தி 3 ஆம் அதிகாரத்தில், பரிசேயரும் யூதத் தலைவர்களுள் ஒருவருமான நிக்கதேமோடு உரையாடுகையில் "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெறுவர்" என்று குறிப்பிடுகின்றார்.

மத்தேயு நற்செய்தி 17, மாற்கு நற்செய்தி 9, மற்றும் லூக்கா நற்செய்தி 9, ஆகிய புதிய ஏற்பாட்டு நூல்களில் இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வில் எலியாவுடன் மோசேவும் இயேசுவோடு பேசுவதாக அமைந்துள்ளது. பிற்கால கிறித்தவர்கள் மோசேயின் வாழ்வோடும், இயேசுவின் வாழ்வோடும் பல ஒப்புமைகளைக் கண்டனர். இயேசுவின் பிறப்பின் போது நடந்த மாசில்லா குழந்தைகள் படுகொலையும் அதிலிருந்து இயேசு தப்பித்ததும், மோசேயின் பிறப்பின் போது குழந்தைகள் படுகொலையும் அதிலிருந்து மோசே தப்பித்ததும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை மற்றும் லூதரனியத்தில் இவரின் விழா நாள் செப்டம்பர் 4 ஆகும். அர்மேனிய திருத்தூதர் திருச்சபையில் இவரின் விழா நாள் ஜூலை 30 ஆகும்.

மொர்மனியத்தில்:-

மற்ற கிறித்தவப் பிரிவுகளை விடவும் பின்னாள் புனிதர் இயக்க மரபினைச் சேர்ந்த மொர்மனியத்தில் பல கூடுதல் நம்பிக்கைகள் உள்ளன. இவர்கள் விவிலிய விவரிப்பினை ஏற்றாலும், அதோடு, மோசே இறக்காமல் விண்ணகம் சென்றதாகவும் நம்புகின்றனர். மோசேயின் புத்தகங்கள் என்னும் நூலையும் தங்களின் புனித நூலாகக் கருதுகின்றனர். இந்த நூலை பிற கிறித்தவ பிரிவினர் திருமுறையாக ஏற்பதில்லை.

இரண்டாம் யோசப்பு இசுமித்து மற்றும் ஆலிவர் கௌடரி ஏப்ரல் 3, 1836 அன்று மோசே மகிமையில் அவர்களுக்குக் காட்சியளித்ததாகவும் அவர்களிடம் பூமியின் நான்கு பாகங்களில் உள்ள இசுரயேலரினை கூட்டிச் சேர்க்கவும், மற்றும் வடக்கு நிலத்தில் வாழும் பத்து பழங்குடியினரை வழிநடத்தவும் சாவிகளை அவர்களிடம் அளித்ததாகக் கூறியுள்ளனர்.

இசுலாமில் மோசே, மூசா என்று அழைக்கப்படுகிறார்:-

திருக்குர்ஆன் இல் அதிக முறை குறிப்பிடப்பட்டுள்ள நபர் மோசே ஆவார். நபிமார்கள் அனைவரிலும் இவரின் வாழ்வே அதிகம் சித்தரிக்கப்படுள்ளது. மொத்தமாக 502 முறை இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பகாய் சமயத்தில் மோசே

பகாய் சமயத்தில் மோசே கடவுளின் தூராக கருதப்படுகின்றார். மோசேக்கு இச்சமயத்தாரால் கொடுக்கப்படும் ஒரு அடைமொழி கடவுளோடு உரையாடுபவர் என்பது ஆகும். பகாவுல்லாவின் வெளிப்படுத்துதலுக்கு மோசே வழிவகுத்தார் என இவர்கள் நம்புகின்றனர்.

மூசா (அரபி : موسى BC 1526- 1406BC) இஸ்லாமிய கோட்பாட்டின் படி ஒவ்வொரு இஸ்லாமியரும் இறைவனின் தூதரையும் நபிமார்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று திருகுரானில் கூறப்பட்டுள்ளது, இதில் மூசாவும் அடக்கம். "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என்றும் இவரை அழைப்பார்கள். "மற்ற நபிமார்களை காட்டிலும் அதிக முறை மூசாவின் பெயர் புனித குரானில் இடம்பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 120 வயது வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. தவ்ராத் வேதம் மூஸா (அலை) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்டது.

மூசாவின் இளமை காலம்:-

மூசா எகிப்தில் வாழ்ந்து வந்த இஸ்ரேலிய குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அந்த காலக் கட்டத்தில் எகிப்தை ஆண்டு வந்த பாரோ மன்னன் குறி சொல்பவர்களை நம்பும் பழக்கம் உடையவன். எகிப்தில் பிறக்க போகும் ஒரு ஆண் குழந்தையின் கையால் ஃபிர்அவுன் (பார்வோன்) மன்னனின் உயிர்க்கு ஆபத்து என்று குறி சொல்பவர்கள் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்க போகும் ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொல்ல ஆணை பிறப்பித்தான் மன்னன் ஃபிர்அவுன். தன்னுடைய பிள்ளையை காப்பாற்ற வேண்டுமென்று மூசா(அலை) அவர்களின் தாயார் வைக்கோலினால் படகு போன்று செய்து நைல் நதியினில் மூசா(அலை) அவர்களை மிதக்கவிட்டார். பின்பு நைல் நதிக்கு குளிக்க வந்த (பார்வோன்) ஃபிர்அவுனின் மனைவி ஆசியா ஆற்றில் மிதந்து வந்த அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார்.

மூசா ஃபிர் அவுனுடைய வீட்டிலேயே அவன் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார். மூசா(அலை) அவரை வளர்க்கும் பொறுப்பு சொந்த தாயார் வசமே வந்தது. எகிப்தியர்களிடம் அடிமைகளாக வேலை செய்து வந்த இஸ்ரேலியர்களை எகிப்தியர்கள் கொடுமை படுத்துவதை கண்டு மனம் நொந்து போனார் மூசா(அலை) அவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு எகிப்தியரை மூசா அவர்கள் கொன்றுவிட்டார்கள். இதனால் மூசா(அலை) அவர்களை குற்றவாளி என்று கூறி தண்டனை கொடுக்குமாறு உத்தரவிட்டான் ஃபிர்அவுன். ஆனால் மூசா(அலை) அவர்கள் தப்பித்து பாலைவனத்திற்கு சென்றுவிட்டார்கள்.

நீண்ட பயணத்திற்கு பிறகு மூசா மதியன் (மிடியன்) என்ற இடத்தினை வந்தடைந்தார். மதியன் நகரத்து மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்ட சுஹைப்(அலை) அவர்கள் இஸ்ரேலியர்களை வழி நடத்தி செல்ல அனுப்பப்பட்ட இறைதூதர் என்று மூசாவை அடையாளம் கண்டு கொண்டார்கள் . பின்பு சிறிது காலம் அங்கே இருந்த மூசாவுக்கு சுஹைப் அவர்கள் தன்னுடைய மகள் ஷஃபூராவை திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு சிறிதுக் காலம் மூசா அங்கே தங்கி இருந்தார்.

மூசா அவர்களுக்கு இறைவனின் அழைப்பு :-

எகிப்திற்கு திரும்ப வேண்டுமென்று மூசா அவர்களின் மனதினில் இறைவன் எண்ணத்தை ஏற்படுத்த மூசா(அலை) திரும்பி செல்லும் போது சினாய் மலையில் இறைவனுடன் பேசும் வாய்ப்பு மூசா(அலை) அவர்களுக்கு கிடைத்தது.

சினாய் மலையில் நெருப்பினை கண்ட மூஸா தன் குடும்பத்தாரிடம் "நீங்கள் இங்கே சிறிது நேரம் தங்குங்கள், நிச்சயமாக நான் நெருப்பினை கண்டேன், ஒரு வேளை அதிலிருந்து வெளிச்சத்தையோ அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையையோ அந்த நெருப்பின் உதவிக் கொண்டு காணலாம்" என்று கூறினார்.

நெருப்பின் அருகே அவர் சென்றவுடன் "மூசாவே" என்று அழைக்கப்பட்டார்.

"நிச்சயாமாக நான் தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும், நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்"

இன்னும் நான் உம்மை என் தூதராகத் தேர்வுசெய்தேன் ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக.

நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே என்னையே நீ வணங்கும்; என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக."

"மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?" என்று இறைவன் கேட்க

(அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்.

அதற்கு இறைவன் "மூசாவே! அதை கீழே எறியும்" என்றான்.

மூஸா அவ்வாறு செய்ததும் அது ஊர்ந்து செல்லும் ஒரு மலை பாம்பாயிற்று.

இறைவன் கூறினான்: "அதைப் பிடியும் பயப்படாதீர் உடனே நான் அதை பழைய நிலைக்கே மீட்டுவேன்"

இன்னும் உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி வெளியில் எடும் அது மாசற்ற வெண்மையாக வெளிவரும் இது மற்றோர் அத்தாட்சி ஆகும்.

இவ்வாறு என்னுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து சிலவற்றை உமக்கு காண்பிக்கிறேன் ஃபிர்அவுனிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்" என்றும் அல்லாஹ் கூறினான். மூசா அல்லாஹ் கூறியபடியே நடந்து கொண்டார். இறுதியில் அல்லாஹ் தனக்கு இட்ட கடமைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அவரிடமே சேர்ந்தார்.