முற்காலப் பாண்டியர்கள்
~~page_heading~~முற்காலப் பாண்டியர்கள்
முற்காலப் பாண்டியர்களுள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன், நிலந்தரு திருவிற் பாண்டியன், முதுகுடுமிப் பெருவழுதி, பெரும்பெயர் வழுதி ஆகியவர்கள் முக்கியம் வாய்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களைப் பற்றி முதலில் காண்போம்.
(1) வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர்.
பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். 24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.
மூன்று கடல்கள் கூடுமிடம் குமரி முனை. இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. இன்று ஓடும் பறளியாற்றின் தொடர்ச்சி ஆகலாம். இதன் கழிமுகத்தில் இவன் விழாக் கொண்டாடினான். அதனால் இந்த விழா முந்நீர் விழா எனப்பட்டது. காவிரியாற்றுக் கழிமுகத்தில் புகார் நகரத்தில் இந்திர விழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
(2) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது. மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான். பிரளயத்தில் உலகம் அழிந்தது. ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்; அரசர் பலரையும் புறங்கண்டவன்; புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்; இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்; வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்; சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்; பெரியோர்களை மதிப்பவன்" என்றெல்லாம் பெருமை படக் கூறப்பட்டு உள்ளது.
இவன் போர்க் களத்தில் கூட அறத்தை கடைபிடித்தவன். "போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை, ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மக்கள், பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள்" என முன்கூட்டியே அறிவித்துப் போரைத் தொடங்கும் இயல்புடையவன். போர்களத்தில் கூட தானங்கள் செய்யத் தவறாதவன்.
(3) நிலந்தரு திருவிற் பாண்டியன்
தொல்காப்பியம் இவனது காலத்தில் தான் அரங்கேற்றப்பட்டது. மேலும் புறநானூற்றில் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு உதவியவன் என்றும். நாகன் இவனது படைத்தலைவன் எனவும். பசும்பூண் பாண்டியன் எனப் போற்றப்பட்டவன் எனவும் குறிப்பு காணப்படுகிறது. மேற்கொண்டு இவனைப் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை.
(4) பெரும்பெயர் வழுதி
பெரும்பெயர் வழுதி என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பாடியுள்ளார். அதில் இவனை ஈகைக்கடன் பூண்ட கவுரியர் வழிவந்தவன் எனக் குறிப்பிடுகிறார். புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இந்தப் பாண்டியனைப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி எனக் குறிப்பிடுகிறது.
இன்னொரு தகவலும் புறநானூற்றில் இவனைப் பற்றிக் காணக் கிடைக்கிறது. அது யாதெனில், மருந்தில் கூற்றம் என்னும் ஊரை இவன் கைப்பற்றினான். அப்போது அவன் யானையின் கழுத்தில் மணி கோத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் இருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கதவுகளை யானைக்கோட்டால் உடைத்து முன்னேறி வென்றானாம்.
இவனது மனைவியின் கற்பும், பதுக்கையுடன் கூடிய இவனது கோட்டை மதிலின் சிறப்பும் அப் புறநானூற்றுப் பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: முற்காலப் பாண்டியர்களின் தலைநகரமாக கொற்கை விளங்கியது எனத் தெரிகிறது.
