முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907 )

bookmark

விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். கி.பி.880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.