மிதிலைக் காட்சிப் படலம் - 720
இராமலக்குமணர்களை யாவரென்று
சனகன் வினவ முனிவன் கூறுதல்
சனகன் வினாவும் விசுவாமித்திரன் உரையும்
720.
இருந்த குலக் குமரர்தமை. இரு கண்ணின்
முகந்து அழகு பருக நோக்கி.
அருந் தவனை அடி வணங்கி. ‘யாரை இவர்?
உரைத்திடுமின். அடிகள்!’ என்ன.
‘விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி
காணிய வந்தார்; வில்லும் காண்பார்;
பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்’ என.
அவர் தகைமை பேசலுற்றான்;
இருந்த குல குமரர்தமை- (சனகன்) தன் அருகில் அமர்ந்திருந்த
உயர்குல மைந்தர்களை; இருகண்ணின் - (தன்) இரண்டு கண்களாலும்;
அழகு முகந்து பருக - அழகை அள்ளி முழுவதும் பருகும் படி;
நோக்கி - பார்த்து; அருந்தவனை - (உடனே) அருந்தவத்தவனான
கோசிகனை; அடிவணங்கி - திருவடிகளில் விழுந்து வணங்கியவனாய்
(அவரை நோக்கி); அடிகள் - தவ வேதியரே!’ யாரை இவர் - இக்
குமாரர்கள் யாவர்?; உரைத்திடுமின் - (இவர்கள் இத்தன்மையர்
என்று) சொல்வீராக; என்ன - என்று கேட்க (கோசிக முனிவன்);
விருந்தினர்கள் - (உன்பக்கம்) புதியவராக வந்த இவர்கள்;
பெருந்தகைமை- பெருந்தகைமை நிரம்பிய; தயரதன் தன் புதல்வர் -
தசரத மன்னரின் மைந்தர்கள்; நின்னுடைய வேள்வி - உனது
யாகத்தை; காணிய வந்தார் - காணும் பொருட்டு வந்துள்ளார்கள்
(அது தீர்ந்துவிட்டதால் இனி); வில்லும் காண்பார் - (உன்னிடமுள்ள)
சிவதனுசையும் பார்ப்பார்கள்; என - என்று கூறி; அவர் தகைமை -
அம் மன்னரின் மைந்தர் தம் பெருமைகளை; பேசல் உற்றான் -
சொல்லத் தொடங்கினான்.
யாரை இவர் உரைத்திடுமின் - ‘ஐ’ இடைச்சொல். அவரது
குலப்பெருமை அவர் பெருமையே என்பது உணருமாறு ‘அவர்
தகைமை பேசல் உற்றான்’ என்றார். வில்லும் காண்பார்: மற்றவர்
போல் வேள்வியைக் கண்களால் காண்டலோடு அமையாமல் நீ கன்னி
மணத்தின் பொருட்டு. வைத்துள்ள சிவதனுசையும் வளைக்க
வல்லவர்கள் என்ற குறிப்பும் தோன்றும். 157
