மிதிலைக் காட்சிப் படலம் - 714
வெயில் பரவுதல்
714.
விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப.
உதயகிரி விரிந்த துளி
பசை ஆக. மறையவர் கைந் நறை மலரும்
நிறை புனலும் பரந்து பாய.?
அசையாத நெடு வரையின் முகடுதொறும்
இளங் கதிர் சென்று அளைந்து. வெய்யோன்.
திசை ஆளும் மத கரியைச் சிந்தூரம்
அப்பியபோல் சிவந்த மாதோ!
விசை - வேகமும்; ஆடல் - வலிமையும்; பசும்புரவி -
பசுமையுடைய குதிரைகளின்; குரம் - குளம்புகள்; மிதிப்ப -
மிதித்தலால; உதயகிரி - உதயமலையில்; விரிந்த தூளி - பரவிய
செந்துகள் - பசையாக - நனையும்படி; மறையவர் கை - வேதியர்கள்
கையால் - நறை மலரும் - தேன் நிறைந்த மலர்களும்; நிறை புனலும்
- நிறைந்த அர்க்கிய நீரும்; பரந்து பாய - பரவிப் பாய்ந்திட
(அப்பசையான செந்தூளியைக் கொண்டு); வெய்யோன் - சூரியன்;
திசை ஆளும் - கிழக்குத் திசையை இடமாகக் கொண்ட. மத கரியை
- மத யானைக்கு; சிந்துரம் அப்பிய போல் - சிந்தூரத் திலகத்தை
அப்பியது போல; அசையாத நெடுவரையின் - சலனமில்லாத அவ்
உதய மலையின்; முகடு தொறும் -சிகரங்களில் எல்லாம்; இளங்கதிர்
சென்று - இளமையான சூரிய கதிர்கள் சென்று; அளைந்து - படிந்து;
சிவந்த - சிவந்த நிறமாய் விளங்கின.
கிழக்கில் உள்ள உயர்ந்த சிகரத்தில் விளங்கும் சூரியக் கதிர்கள்.
கிழக்குத் திசைக்குரிய யானையின் முகத்தில் தீட்டப்பட்ட சிந்தூரத்
திலகம் போன்று இருந்து - தற்குறிப்பேற்றவணி. காலையந்தி
வழிபாட்டில் மறையவர் மந்திரத்தின் மூலம் எடுத்துவிடும் அருக்கிய
நீர். அந்த வேளையில் மந்தேகர் என்ற அசுரரால்
சூரியனது தேர். தடை செய்யப்படுவதை வச்சிரப் படையாகச்
சென்று தடுத்து. அவர்களையும் அழித்து வருகின்றது என்பது நூல்
மரபு. 151
