மிதிலைக் காட்சிப் படலம் - 712
712.
வீசுகின்ற நிலாச்சுடர் வீழ்ந்ததால்-
ஈசன் ஆம் மதி ஏகலும். சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே.
ஈசன் ஆம் மதி- உயிருக்கு உயிரான சந்திரன் என்னும் கணவன்;
ஏகலும் - தம்மைப் பிரிந்து போன பின்பு; ஆசை மாதர்-
திசைகளாகிய (அவனுடைய) ஆசை மனைவியர்; பூசுவெள் -
(அக்கொழுநனால் பூசப்பட்ட) வெண்மையான; கலவைப் புனை
சாந்தினை - கலவையாகிய சந்தனக் குழம்பை; சோகத்தால்-
அவனைப் பிரிந்த துயரத்தால்; அழித்தனர் என்ன -
அழித்துவிட்டவர்களைப் போல; வீசுகின்ற நிலாச்சுடர் - (சந்திரன்
மறைந்த அளவில்) முன்பு (எல்லாத் திசையிலும்) பரவியிருந்த
அவனது ஒளியாகிய நிலா; வீந்தது - (ஒளி) ஒழிந்தது.
ஆசை மாதர்: திசைகளாகிய மனைவியர்; காதலுடைய மாதர்
எனவும் பொருள் தரும். தற்குறிப்பேற்றவணி. 149
