மிதிலைக் காட்சிப் படலம் - 682

bookmark

கோசிகன் மேற்றிசை சென்று தவமியற்றல்

கௌசிகன் மேலைத்திசை சென்று தவம் புரிதல்
 
682.

“அரச மா தவன் நீ ஆதி;
   ஐந்து நாள் தென்பால் வந்து. உன்
புரை விளக்கிடுக!” என்னா.
   கடவுளர் போய பின்னர்.
நிரை தவன் விரைவின் ஏகி.
   நெடுங் கடற்கு இறைவன் வைகும்
உரவு இடம்அதனை நண்ணி.
   உறு தவம் உஞற்றும் காலை.  
 
அரச மாதவன்- சிறந்த அரசமுனி; நீ ஆதி - நீ ஆவாய்; ஐந்து
நாள்  தென்பால்  -  (வடக்கேயுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களுள்)
ஐந்து  நட்சத்திரங்கள்  தெற்குத் திசை; வந்து உன்புரை - வந்திருந்து
உன்  மேன்மையை  ; விளக்கிடுக  -  தெரிவிக்க கடவன; என்னா -
என்று  சொல்லி  (கௌசிகனைச்  சமாதானப்படுத்திவிட்டு);  கடவுளர்
போய பின்னர் - தேவர்கள் புறப்பட்டுப் போன பின்பு; நிரை தவன்
- நேர்மையான  அத்தவ   முனிவன்;  விரைவின் ஏகி - வேகமாகச்
சென்று; நெடுங்கடற்கு  இறைவன் - பெரிய கடலுக்குத் தலைவனான
வருணன்; வைகும் - (திக்குப் பாலகனாக) தங்கப்பெற்று; உரவு இடம்
அதனை - வலிய இடமான மேற்குத் திசையை; நண்ணி - அடைந்து;
உறுதவம்  -  மிக்க  தவத்தை;  உஞற்றும்  காலை -செய்து வருங்
காலத்து.  

ஐந்து     நட்சத்திரங்கள்:   அனுடம். கேட்டை. மூலம்.  பூராடம்.
உத்திராடம்.  படைப்புக் காலம் தொடங்கி வடதிசையில் இருந்த இவை
விசுவாமித்திரனுக்காக தென் திசைக்கு வந்தன என்பர்.           119