மிதிலைக் காட்சிப் படலம் - 667

bookmark

பிரமதேசு பெறக் கோசிகன் தவமேற் செல்லுதல்

கௌசிகன் தவம் மேற்கொள்ளல்
 
667.

 ‘கண்டனன் அரசன்; காணா.
   ‘’கலை மறை முனிவர்க்கு அல்லால்
திண்திறல் வலியும் தேசும்
   உள எனல் சீரிது அன்றால்;
மண்டலம் முழுதும் காக்கும்
   மொய்ம்பு ஒரு வலன் அன்று’’ என்னா.
ஒண் தவம் புரிய எண்ணி.
   உம்பர்கோன் திசையை உற்றான்.
 
(தான்    விட்ட உருத்திரப் படை செயலற்றதை) அரசன் - இந்தக்
கௌசிகன்; கண்டனன்  - பார்த்தான்; காணா - (அவ்வாறு) பார்த்து;
திண்திறல் வலியும் -  உறுதியான வெற்றியும் வலிமையும்; தேசும் -
ஒளியும்;  கலை  மறை -  வேதக்  கலைகளை அறிந்த; முனிவர்க்கு
அல்லால் -  முனிவர்களுக்கு  மாத்திரம்  அல்லாமல்; உள எனல் -
(பிறர்க்கு)  உள்ளன  என்று  கருதுதல்;  சீரிது அன்று - சிறப்பானது
அல்ல;  மண்டலம்  முழுதும்  -  உலகம்  முழுவதையும்;  காக்கும்
மொய்ம்பு  - அரசாளும்  வலிமை;  ஒரு  வலி  அன்று - (முனிவர்
வலிமைக்கு  முன்)  ஒரு  வலிமையாக  மாட்டாது;  என்னா - என்று
உறுதியாக  அறிந்து;  ஒள்தவம்  புரிய  எண்ணி  -  சிறந்த  தவத்
தைச்  செய்ய  நினைத்து; உம்பர்கோன்  - தேவந்திரனது; திசையை
உற்றான் - திசையான கிழக்குத் திக்கை அடைந்தான்.   

அரசர் ஆற்றலைவிட முனிவர் ஆற்றலே சிறப்புடையது  என்பதை
அறிந்த கௌசிகன் அதைப் பெறக் கருதித் தவம் செய்யச்   சென்றான்.
திறல் - வெற்றி; திறல் வலி - வெற்றிக்குக் காரணமான வலிமை.  104