மிதிலைக் காட்சிப் படலம் - 586
கன்னிமாடத்தை அணுகி நிற்றல்
கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேரெழில் சிறப்பு
586.
பொன்னின் சோதி. போதினின்
நாற்றம். பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை.
செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின்
மாடே. களி பேடோடு
அன்னம் ஆடும் முன்துறை
கண்டு. அங்கு. அயல் நின்றார்.
கன்னி மாடத்து- கன்னிகையர் வாழும் மாடத்தின்; உம்பரின்
மாடு - மேல் இடத்திற்கு அருகே; களிபேடோடு அன்னம்
ஆடும் - மகிழ்ச்சியோடுள்ள பெட்டை அன்னங்களோடு ஆண்
அன்னங்கள் கூடிக் குலாவும்; முன்துறை - முற்றத்திடத்து;
பொன்னின் சோதி - பொன்னின் ஒளியும்; போதின் இன் நாற்றம்
- பூவின் நறுமணமும்; தென் உண் தேனின் - வண்டுகள்
உண்ணும் தேனின்; தீம்சுவை - இனிமையான சுவையும்; செஞ்சொல்
கவி இன்பம் - தகுதியான சொற்களால் அமைந்த கவிதை
இன்பமும்; பொலிவே போல் - (என்னும் இவை ஒரு வடிவம்
எடுத்து) விளங்குவது போல (சீதை தோன்றியதை) ; கண்டு - பார்த்து;
அங்கு அயல் நின்றார் - (மூவரும்) அந்த இடத்திற்கு அருகில்
நின்றார்கள்.
சீதை வடிவு: பொன்னின் சோதி. பூவின் நறுமணம். தேனின்
தீஞ்சுவை. செஞ்சொல் கவியின்பம் ஆகியவை ஒரு வடிவம்
எடுத்தாற்போலச் சீதை விளங்குகிறாள். ஐம்பொறி இன்பம்:
ஐம்பொறிகளால் பெறப்படும் இன்பங்களில் ஒளி. நாற்றம். சுவை. ஓசை
என்ற நான்கைக் கூறி ஊற்றின்பத்தை உபலட்சணத்தால்
உணரவைத்தார். கவி என்பது வளம்பெற்ற சொற்களைத் தனது
உயிர்நிலையாகக் கொண்டது. ஆதலால் ‘செஞ்சொற்கவி’ எனப்பட்டது.
‘பொலிவே போல்’ என்பதைக் ‘கவியின்பம்’ என்பதனோடு சேர்க்க
வேண்டும். வேறு உரை: பொன்னிலே ஒளி பொலிதல் போலவும்.
மலரில் நறுமணம் பொலிதல் போலவும். தேனிலே இன்சுவை
பொலிதல் போலவும். கவிஞர் பாவில் செவ்விய ஓசையின்பம்
பொலிதல் போலவும் (ஒளி முதலியவற்றோடு விளங்குபவளாகி) கன்னி
மாடத்தின் மேல் அன்னப்பேடு பொன்ற தோழியரோடு பெண் அரச
அன்னம் போன்ற சீதை விளையாடும் முற்றத்தைக் கண்டு அருகில்
நின்றார்கள். தென் - தேன் என்பதன் குறுக்கல் விகாரம். பேடு -
பறவையின் பெண்பாய் பெயர். 23
