மிதிலைக் காட்சிப் படலம் - 580
மகளிர் வட்டாடும் இடங்கள்
580.
கடகமும். குழையும். பூணும்.
ஆரமும். கலிங்க நுண் நூல்
வடகமும். மகர யாழும்
வட்டினி கொடுத்து. வாசத்
தொடையல் அம் கோதை சோர.
பளிக்கு நாய் சிவப்பத் தொட்டு;
படை நெடுங் கண்ணார் ஆடும்
பண்ணைகள் பலவும் கண்டார்.*
கடகமும் குழையும் - கைவளைகளையும் காதணிகளையும்;
பூணும் ஆரமும் - மேலும் பல அணிகளையும் இரத்தின
மாலைகளையும்; நுண் நூல் - மெல்லிய நூல் இழைகளால் நெய்யப்
பெற்ற; கலிங்கம் வடகமும் - கலிங்க நாட்டு விலையுயர்ந்த
மேலாடைகளையும்; மகர யாழும் - மகர விணைகளையும்; வட்டினி
கொடுத்து - பந்தயப் பொருளாக வைத்து; வாசத்தொடையல் -
மணமுள்ள பூமாலைகளை அணிந்த; அம் கோதை சோர - அழகான
(தம்) கூந்தல் தளரும்படி; பளிங்கு நாய் - பளிங்கால் அமைந்த
நாய் எனப்படும் காய்கள்; சிவப்பத் தொட்டு - செந்நிறம்
அடையுமாறு (அவற்றைத் தம் செங்கைகளால்) தொட்டு;
படைநெடுங்கண்ணார் - வேல் போன்ற நீண்ட கண்களையுடைய
பெண்கள்; ஆடும் பண்ணைகள் - விளையாடுகிற இடங்கள்;
பலவும் கண்டார் - பலவற்றையும் பார்த்தார்கள்.
கலிங்க நுண்ணூல் - ‘விலை வரம்பு அறியலாகா இன்னுரைக்
கலிங்கம்’ - சிந்தா: 697. பளிங்கு நாய்: ‘பலகை செம்பொனாகப்
பளிங்கு நாயாய்ப் பரப்பி’ - சிந்தா:927. வடகம்: மேலாடை;பண்ணை;
விளையாடும் இடம். 17
