மிதிலைக் காட்சிப் படலம் - 564

bookmark

மிதிலை வருணனை : கொடிகளின் தோற்றம்

564.

‘மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!
 

அந்த கடிநகர் -காவல் மிக்க அந்த மிதிலா  நகரம்;  செய்யவள்
- திருமகள்;   மை  அறு  மலரின்  நீங்கி  - குற்றமற்ற தாமரை
மலரை  விட்டுப்  பிரிந்து; யான் செய் மாதவத்தின் - நான் புரிந்த
மிகப்   பெரிய   தவத்தால்;  வந்து இருந்தாள் - என்னிடம் வந்து
பிறந்துள்ளாள்; என்று செழுமணிக் கொடிகள் என்னும்  -  என்று
கூறிப் பெரிய அழகிய  கொடிகள்  என்கின்ற;  கைகளை  நீட்டி  -
(தன்)  கைகளை   மேலும்  கீழுமாக அசைத்துக் காட்டி (அவற்றால்);
கமலம் செங்கண் ஐயனை- தாமரை போன்ற கண்களைக்  கொண்ட
இராமனை; ஒல்லை வா  என்று  -  விரைவில் வந்து சேர்க என்று;
அழைப்பது போன்றது - அழைப்பதைப் போன்றுள்ளது. 

அணி: தன்மைத் தற்குறிப்பேற்றவணி. இராமன். அருகிலே செல்லும்
போது   அந்நகரத்து   மதில்கள்  மேலுள்ள  கொடிகள்   அசைவது.
திருமகள்   தன்னிடத்தில்   சீதையாகப்  பிறந்துள்ளாள்   என்பதைக்
குறிப்பாகச்  சொல்லி  அவளுக்குக்  கணவனாவதற்கு ஏற்ற இராமனை
விரைவிலே   வந்து   மணம்   புரியுமாறு  அந்த  நகரம்  கைகாட்டி
அழைப்பது  போன்றது.  உருவகம்:  கொடிகளாகிய  கைகள். தாமரை
மலரின்  குற்றம்:  மலர்தலும்  பின்  குவிதலும். வாட்டம் அடைதலும்
ஆகும். யான் செய் மாதவத்தின் வந்து: திருமகள் தன்  இயற்கையான
இடத்தைவிட்டு  விருப்பத்தோடு  தன்னிடம்  பிறப்பதற்கு ஏற்ற தகுதி
உயர்ந்த தவத்தால் அமைய வேண்டும்.                        1