மாரீசன் வதைப்படல், சீதை கவரப்படல்

bookmark

கர-தூஷணர்களின் வதையால், நிறைவேறாத தன் நோக்கத்தை சூர்ப்பனகை, இலங்கைச் சென்று, இராவணனிடம், சீதையின் பேரழகையும், மனிதப் பிறவிகளான இராம - இலக்குவனர்கள் தமக்களித்த தண்டனையையும் உரைத்தாள். இராவணனுடன் பஞ்சவடியை அடைந்த மாரீசன், தங்க மான் வடிவில் சீதை முன் உலாவினான். தங்க மானை பிடித்துத் தர இராமரிடம் கேட்ட போது, இலக்குவன், இது மாய மான் என்றார். ஆனால் சீதை வலியுறுத்தி கேட்டதால், இராமர் தங்க மானைப் பிடித்து, சீதைக்குப் பரிசளிக்க விரும்பினார். இராமர் தங்க மான் வடிவில் வந்த அரக்கன் மாரீசன் மீது அம்பெய்திய போது, இலக்குமணா என அலறியவாறே இறந்தான்.

இவ்வலறல், இராமனிடமிருந்து வந்த அபயக் குரல் எனக்கருதிய சீதை, இராமரை அபாயத்திலிருந்துக் காக்கச் செல்ல பணித்தாள். இலக்குவன், இது மாய மான் வடிவில் வந்த அரக்கனின் குரல் என்று கூறியும், சீதை, இராமரைக் காக்க உடனே விரைந்து செல்லப் பணித்தாள். இக்கூக்குரல் அரக்கனின் சதித்திட்டம் என்று உணர்ந்த இலக்குவன், காட்டில் தனிமையில் இருக்கும் சீதையை அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டி, குடிலைச் சுற்றிலும் இலட்சுமணன் கோடு கிழித்து, இதனை தாண்டி வெளியே வரவேண்டாம் என உரைத்தான்.

இலக்குவன், இராமனைத் தேடிச் சென்ற வேளையில், இராவணன் துறவிக் கோலத்தில், சீதையின் குடிலை அடைந்து யாசகம் கேட்ட போது, சீதை இலட்சுமணன் வரைந்த கோட்டைத் தாண்டி பிச்சையிட வந்த போது, இராவணன் சீதையை கவர்ந்து வான்வெளியில் சென்றான். இந்நிகழ்வைக் கண்ட ஜடாயு பறவை, சீதையைக் காப்பாற்ற, இராவணனுடன் போரிட்டதால், மூர்ச்சையடைந்து தரையில் வீழ்ந்தது.

இறந்தது தங்க மான் அல்ல, அரக்கன் என அறிந்த இராம - இலக்குவனர்கள், குடிலை நோக்கித் திரும்பிய போது, சீதையை காணாது வருந்தும் வேலையில், மரணத்தருவாயில் இருந்த ஜடாயு, சீதையை, இராவணன் வான் வழியாக இலங்கைக்கு கவர்ந்து சென்றதைக் கூறி மடிந்தது. இராமரின் அருளால் ஜடாயு மோட்சம் அடைந்தது.