மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார். 4
பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்,பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனென் றில்லை;
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.6
