மணம்
நினைக்க நெஞ்ச முருகும்;பிறர்க்கிதை
நிகழ்த்த நாநனி கூசு மதன்றியே
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்
யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்;
அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்;
அம்ம!மாக்கள் மணமெனுஞ் செய்தியே.
வினைத்தொ டர்களில் மானுட வாழ்க்கையுள்
மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ! 30
வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்!
மிகவி ழிந்த பொருளைப் பொருளென்பார்;
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை
நல்ல தோர்மண மாமென நாட்டுவார்.
கூடு மாயிற் பிரம சரியங் கொள்;
கூடு கின்றில தென்னிற் பிழைகள் செய்து
ஈட ழிந்து நரகவழிச் செல்வாய்;
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்.31
வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
பார்க்கி நும்பெறல் சால வரிதுகாண்.
புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணிப்
புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ?
அசுத்தர் சொல்வது கேட்களிர்,காளையீர்;
ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின்.32
வேறு தேயத் தெவரெது செய்யினும்
வீழ்ச்சி பெற்றவிப் பாரத நாட்டினில்
ஊற ழிந்து பிணமென வாழுமிவ்
வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறு மெந்தத் துயர்கள் விளையினும்
கோடி மக்கள் பழிவந்து சூழினும்
நீறு பட்டவிப் பாழ்ச்செயல் மட்டினும்
நெஞ்சத் தாலும் நினைப்ப தொழிகவே. 33
பால ருந்து மதலையர் தம்மையே
பாத கக்கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடு குலங்கெடல் நாடிய
மூட மூடநிர் மூடப் புலையர்தாம்,
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக்
கொலையெ நுஞ்செய லொன்ரினை யுள்ளவும்
சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர்
தாத ராகி அழிகெனத் தோன்றுமே! 34
ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆள் நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
தீங்கு ம்ற்றிதி லுண்டென் றறிந்தவன்
செயலெ திர்க்குந் திறனில நாயினேன்.
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன். 35
மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்;
நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்;
முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்
மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன்.
கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்
காத லொன்று கடமையொன் றாயின! 36
மதனன் செய்யும் மயக்க மொருவயின்;
மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்;
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக்
கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்?
எதனி லேனுங் கடமை விளையுமேல்
எத்து யர்கள் உழன்றுமற் றென்செய்தும்
அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று
அறம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன். 37
சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்
சகுன மந்திரந் தாலி மணியெலாம்
யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது
யாது தர்ம முறையெனல் காட்டிலர்.
தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்
செய்து மற்றவை ஞான நெறியென்பர்;
மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே? 38
