பூதத்தாழ்வார்

bookmark


பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.

பூதத்தாழ்வார் அவதரித்ததாக கருதப்படும் அவதாரத் தலம்:-

மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதாரத்தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

பூதத்தாழ்வார் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றாகக் கருதப்படும் கௌமோதகி (அதாவது இது திருமாலின் கதையின் பெயர்) என்ற ஆயுதத்தின் அம்சம் ஆவார்:-

திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவம் நம்புகின்றது. திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.

இவருக்கு சமகாலத்தவர்கள்:-

இவர் பொய்கையாழ்வார், பேயாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.சாமி சிதம்பரனார் என்ற அறிஞரின் கணிப்புப் படி இவர்கள் யாவரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது.