பூக் கொய் படலம் - 999

bookmark

ஒரு தலைவன் மாதவிப் பந்தரை இரத்தல்

999.

அம்தார் ஆகத்து ஐங் கணை
   நூறாயிரம் ஆகச்
சிந்தா நின்ற சிந்தையினான்.
   செய்குவது ஓரான்.
‘மந்தாரம் கொண்டு ஈகுதியோ.
   மாதவி?’ என்று. ஓர்
சந்து ஆர் கொங்கைத் தாழ்
   குழலாள்பால் தளர்வானும்;
 
அம்     தார் ஆகத்து -  அழகிய மலர் மாலையணிந்த மார்பில்;
ஐங்கணை  நூறு ஆயிரம் ஆக - மன்மதனின் ஐந்து பூங்கணைகளும்
இலட்சக்கணக்கில்  பாய்ந்ததனால்; சிந்தா  நின்ற  சிந்தையினான்  -
சிந்துகின்ற  (சிதறுகின்ற)   சிந்தையுடையவனான   ஒருவன்; செய்குவது
ஓரான் - (தான்) செய்யவேண்டிய செயல் இதுவெனத்  தெரியாதவனாய்;
மாதவி- குருக்கத்திக் கொடியே!; மந்தாரம் கொண்டு ஈகுதியோ? - (நீ)
மந்தார  மலரைப்  பூத்துத்  தருவாயோ?;   என்று - எனக் கூறி; சந்து
ஆர்   கொங்கை   -   சந்தனக்  குழம்பணிந்த  கொங்கையும்;  ஓர்
தாழ்குழலாள்  பால் - தாழ்ந்த கூந்தலையும் உடையாள் ஒருத்தியிடம்;
தளர்வானும் - (மனம்) தளர்ந்து நிற்பவனும். 

மன்மதனுடைய   மலர்க் கண்கள் துளைத்த மார்பினையுடைய வீரன்
ஒருவன்.  தன்  காதலி  ஊடலால்  நீங்கிப்   போனதனை  ஆற்றாமல்
சிந்தை  திரிந்தவனாய். மாதவிக் கொடியிடத்தில் மந்தார  மலர்  கேட்டு
மயங்கிப்    பிதற்றினான்   என்பதாம்.    போர்க்களத்தில்    பகைவர்
கொடுங்கணைகளுக்கு  நிலைகுலையுமாறு  வெற்றி  மாலைகளைச் சூடிய
மார்பேந்தியவன்.  மன்மதனின்  பூங்கணைகளுக்கு   ஆற்றாது   நிலை
குலைந்து   போனான்   என்பார்.   காதலின்    வலிமை   கூறியவாறு
“எண்ணுதற்  கோஒ  உடைந்ததே  ஞாட்பினுள்   நண்ணாரும் உட்கும்
என் பீடு” (திருக். 1088) என்பார் திருவள்ளுவதேவரும்.            25