பூக் கொய் படலம் - 998

bookmark

ஒரு பெண் கிள்ளையை அனுப்பித் தொடர்தல்

998.

யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள்.
   ஓர் இகல் மன்னன்.
தாழத் தாழாள்; தாழ்ந்த மனத்தாள்
   தளர்கின்றாள்;
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்;
   அவன் நிற்கும்
சூழற்கே. தன் கிள்ளையை ஏவித்
   தொடர்வாளும்;
 
யாழ்   ஒக்கும்  சொல் - யாழிசையை யொத்து இனிமை பயக்கும்
மொழிபேசும்;   பொன்   அனையாள்  -  திருமகளைப்  போன்றாள்
ஒருத்தி;  ஓர்  இகல்  மன்னன்  -  ஒப்பற்ற  வலிமை வாய்ந்த (தன்)
கணவனான  அரசன்;   தாழ  -  (தன்னை) வணங்கி நிற்க; தாழாள் -
(சிறிதும்)  மனம்   இளகாதவளாயிருந்து; தாழ்ந்த மனத்தாள் - (அவன்
அப்பாற்  சென்றவுடன்)  (பின்பு)  மனம் இளகியவளாய்; தளர்கின்றா -
(தன் செயலுக்கு) மிகவும் வருந்தியவளாய்;  ஆழத்து உள்ளும் கள்ளம்
நினைப்பாள்    -   ஆழ்ந்து   எண்ணிய    சூழ்ச்சியை   மனத்துட்
கொண்டவளாய்;  அவன்  நிற்கும்  சூழற்கே  -  கணவன்  நிற்கின்ற
சோலையின்   பகுதிக்கே   (ஏகுமாறு)  ;  தன்  கிள்ளையை  ஏவித்
தொடர்வாளும்  -  தான் வளர்த்த செல்லக் கிளியை முன்னால் ஏவிப்
பின்னால் அதனைத் தொடர்ந்து செல்வாளும்.                    24

தாழத்     தாழாமையை “உணர்ப்பு  வயின்  வாரா ஊடல்” என்பர்
தொல்காப்பியர்.  (தொல். கற்பு. 9) தன்  உரிமை  மிகுதியால். யாரேனும்
அவன்  உள்ளத்தின்  ஆழத்தே  குடி புகுந்திருக்கக்  கூடுமோ  என்று
அவன்  கள்ள  உள்ளம்  சிந்திப்பான்  என்பார்.  “ஆழத்து  உள்ளும்
கள்ளம்  நினைப்பாள்”  என்றார்.  இகல்  -  வலிமை.  சூழல் - இடம்.
கிள்ளை   -   கிளி.   தாழாள்.   தளர்கின்றாள்.     நினைப்பாள்  -
முற்றெச்சங்கள்.