பூக் கொய் படலம் - 982

bookmark

ஆடவர்தோள் ஏறி மகளிர் பூக்கொய்தல்

982.

அம்புயத்து அணங்கின் அன்னார்
   அம் மலர்க் கைகள் தீண்ட.
வம்பு இயல் அலங்கல் பங்கி.
   வாள் அரி மருளும் கோளார்-
தம் புய வரைகள் வந்து
   தாழ்வன; தளிர்த்த மென் பூங்
கொம்புகள் தாழும் என்றல்.
   கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ!
 
அம்புயத்து     அணங்கின் அன்னார் - தாமரை மலரில் வாழும்
திருமகளைப்  போன்ற  (அழகிய)   அம்மகளிரின்;  அம்மலர்க்கைகள்
தீண்ட  -  அழகிய  அம்  மலர்  அனைய   கரங்கள்  தீண்டியவுடன்;
வம்பியல்  அலங்கல் பங்கி - மணம் பொருந்திய மாலைகளையணிந்த
மயிர்முடியினையும்;  வாள்  அரி  மருளும்  கோளார்தம்  -  வாள்
போன்று   பாயும்    கொடுமையினையுடைய   சிங்கங்களும்   அஞ்சும்
வலிமையினையும்  உடைய  ஆடவர்கள்  தம்முடைய;  புய  வரைகள்
வந்து  தாழ்வன - மலையனைய தோள்கள் அம்மகளிரின்  முன் வந்து
தாழ்ந்து வணங்கி நிற்பன (என்றால்); தளிர்த்த மென்பூங்கொம்புகள் -
(மெல்லிய)    தளிர்களையும்    மெல்லிய    பூக்களையும்    உடைய
பூங்கொடிகள்;   தாழும்   என்றல்  -  அம்  மகளிர்  தீண்டியவுடன்
தாழ்கின்றன  என்பது;  கூறலாம்  தகைமைத்து  ஆமோ? - சிறப்பாக
எடுத்துக் கூறத்தக்கதோ? 

‘மலர்க்கைகள்   தீண்டப் புய வரைகள் தாழ்வன’ என்று. மலர்களின்
முன்  மலைகள்  வீழ்ந்து  கிடக்கும்  வியப்புக் கண்டு கூறியவாறு. மேற்
பாடலில்      மகளிர்க்கு      அஃறிணைகளே      வணங்குகின்றன;
உயர்திணைகளைப்பற்றிக்    கூறவேண்டுமோ   என்றவர்.  இப்பாடலில்
உயர்திணைகளே   வணங்குகையில்    அஃறிணைகளைப்பற்றிக்   கூற
வேண்டுமோ   என   மாற்றிக்   கூறிச்   சுவையூட்டினார்.   ஆகவே.
இருதிணை யுயிர்களும் மகளிரை வணங்கும் என்பது தெளிவாயிற்று.   8