பூக் கொய் படலம் - 977
அனைவரும் சோலை சேர்தல்
உச்சிவேளையில் சோலையைச் சார்தல்
977.
அடைந்து. அவண்இறுத்த பின்னர்.
அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான்;
மடந்தையர் குழாங்களோடு.
மன்னவரும். மைந்தர்தாமும்.
குடைந்து வண்டு உறையும்
மென் பூக் கொய்து நீராட. மை தீர்
தடங்களும். மடுவும் சூழ்ந்த.
தண் நறுஞ் சோலை சார்ந்தார்.
அவண் அடைந்து இறுத்த பின்னர் - அச்சோணை யாற்றின்
கரையில் அச்சேனைக் தொகுதி தங்கிய பின்பு; அருக்கனும் உம்பர்ச்
சேர்ந்தான் - சூரியனும் வான் மேல் ஏறினான்; மடந்தையர்
குழாங்களோடும் - (தத்தம்) மனைவியர் கூட்டங்களோடு; மன்னரும்
மைந்தர்தாமும் - அரசர்களும் இளவரசர்களும்; வண்டு குடைந்து
உறையும் மென்பூக் கொய்து - வண்டுகள் துளைத்துத் திளைக்கும்
மெல்லிய மலர்களைப் பறித்து; நீராட - (நீரில்) மகிழ்ந்து விளையாட;
மைதீர் தடங்களும் மடுவும் - தூய தடாகங்களும் மடுக்களும்
சுற்றியுள்ள; தண் நறுஞ் சோலை சார்ந்தார் - குளிர்ச்சியும் மணமும்
மிக்க சோலையினை அடைந்தனர்.
வண்டுகள் மலரைக் குடைந்து தேன் ஆடல் கண்டு இவர்களும்
தடாகங்களைக் குடைந்து நீராடும் நினைவுற்றனர். என்பது குறிப்பு.
தடம்: அகன்று பெரிதான நீர்நிலை. மடு: ஆழ்ந்து சிறிதான நீர்நிலை.
நீராடுங்காலை. மலர்களைப் பறித்து வந்து. ஒருவர் மேல் ஒருவர்
இலக்குத் தவறுதல் இன்றி வீசி விளையாடுதல் நீர் விளையாட்டு எனத்
தெரிகிறது. 3
