பூக் கொய் படலம் - 975
சூரியன் உதித்தல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
975.
மீனுடை எயிற்றுக் கங்குல் -
கனகனை வெகுண்டு. வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும்
ஆயிரம் கரங்கள் ஓச்சி.
தானுடை உதயம் என்னும்
தமனியத் தறியுள் நின்று.
மானுட மடங்கல் என்ன.
தோன்றினன். - வயங்கு வெய்யோன்.
மீனுடை எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு- விண்மீன்களைப்
பற்களாகக் கொண்ட இரவாகிய இரணியனைச் சினந்து; வெய்ய கான்
உடைக் கதிர்கள் என்னும் - வெப்பம் உடைய செறிந்த கிரணங்கள்
என்கின்ற; ஆயிரம் கரங்கள் ஓச்சி - ஆயிரம் கைகளை வீசி; தான்
உடை உதயம் என்னும் - தான் தோன்றுதற்கு இடமான உதயகிரி
என்கின்ற; தமனியத் தறியுள் நின்று - தங்கத் தூணிலிருந்து; மானுட
மடங்கல் என்ன - நரசிங்கப் பெருமாள் (தோன்றியது) போல; வயங்கு
வெய்யோன் தோன்றினன் - ஒளியுமிழ்ந்தவண்ணம் கதிரவன்
உதித்தான்.
உருவகத்தை உறுப்பாகக் கொண்ட உவமையணி. சூரியன்
ஆயிரமாயிரம் கிரணங்களையுடையவன். ஆதலால் ஆயிரமாயிரம்
கைகளோடு தோன்றிய நரசிங்கப் பெருமானாக உவமிக்கப் பெற்றான்.
“ஆயிரங் கரங்கள் ஓச்சி” என்பதில் ஆயிரம் என்பது மிகுதி குறித்து
நின்றது. “கையாயிரம் அல்ல கணக்கிலவால்” கம்ப. 6304 என
நரசிங்கம் ஆயிரமாயிரம் கரங்களோடு தோன்றியதெனப் பின்னும்
குறிப்பர். “ஆயிரந்தோள் எழுந்தாடப் பைங்கண் இரண்டு எரிகான்ற
நீண்ட எயிற்றோடு பேழ்வாய்ச் சிங்க உருவின் வருவான்.” (பெரிய
திரு. 3-3-8) எனத் திருமங்கையாழ்வாரும் இக்கோலத்தை
வருணிப்பார். உதய காலத்தே உதயகிரி பொன்னிறம் பெற்றுப்
பொலியுமாதலின் அது நரசிங்கம் உதித்த பொன் தூணுக்கு
உவமையாயிற்று. நரசிங்கம் எனும் வடசொல்லை “மானுடமடங்கல்”
என மொழியாக்கம் செய்தார். மேலும் “மானுடமடங்கல்” (கம். 6304)
என்பார். “நரங்கலந்த சிங்கமாய்” (இரண் திருவந். 84) “அரியும்
மானுடமும் உடனாய்த் தோன்ற” (திருமங். 8-8-4) என
ஆழ்வார்களும் குறிப்பர். 1
