பூக் கொய் படலம் - 1006

bookmark

ஒருவன் வில்லும் தாமரையும் கை கொண்டு திரிதல்

1006.

வில்லில் கோதை நாண் உற மிக்கோன்.
   இகல் அங்கம்
புல்லிக் கொண்ட தாமரை மென் பூ
   மலர் தாங்கி.
அல்லின் கோதை மாதர் முகப்
   பேர் அரவிந்தச்
செல்வக் கானில். செங்கதிர் என்னத்
   திரிவாரும்.
 
மிக்கோன்     -  (தகுதிகளால்)  மேம்பட்டான் ஒருவன்; வில்லில்
நாண்கோதை  உற - (தன்)  வில்லினுடைய நாண் தன் இடக் கைவிரல்
கவசத்திற் பொருந்த.  (ஒரு கையில் வில்லேந்தியவாறு) ; இகல் அங்கம்
-  வலிமையுள்ள  வலக்கையில்; புல்லிக்  கொண்ட  தாமரை  மென்
பூத்தாங்கி  - பறித்துக் கொண்ட  மெல்லிய தாமரைப் பூவைத் தரித்துக்
கொண்டு; அல்லின் கோதை மாதர் - இருள் போன்ற கூந்தலையுடைய
மகளிரின்; முகச் செல்வப்பேர் அரவிந்த மலர்க் கானில் - முகங்கள்
என்னும்  வளமுள்ள   பெரிய தாமரைக் காட்டில்; செங்கதிர் என்ன -
செந்நிறக்         கதிர்களையுடைய         கதிரவன்        போல
(மலர்ச்சியையுண்டாக்கியவாறு);      திரிவாரும்     -   செருக்கோடு
உலாவுவாரும். 

ஒரு    கையில்  வில்லும். ஒரு கையில் மலரும் ஏந்தியவாறு. மகளிர்
முகங்கள்  மலருமாறு  திரிந்தான்  ஓர் வீரன் என்க. இடக்கையில் நாண்
ஏந்திய வில் அவன்  வீரத்தைக்  குறித்து நின்றது. வலக்கையில் ஏந்திய
தாமரைப்பூ   காதற்   குறிப்பைத்  தோற்றுவித்தது.   வீரமும்  காதலும்
மேலோங்கி  நின்றவர்  ஆடவர்  எனக்  குறித்தவாறு.  வில்லின் நாண்
உராயாமல்  தடுக்க  இடக்கையில்  உறை அணியும்  வழக்கம்  தோன்ற.
“வில்லின் நாண் கோதை உற”  என்றார்.  கோதை:  உறை.  பூவேந்திய
கை    வலக்கை  என்பது  தோன்ற.  “இகல் அங்கம்” என்றார்.  இகல்:
வலிமை.  வலிமையுடைய   கை  வலக்கை எனப்படுவதாயிற்று. கோதை:
பெண்டிர்  கூந்தல்;   வில்லாளர்  கையுறை.   இரண்டிற்கும்  வேறுபாடு
தோன்ற.   ஒன்றை.   “வில்லின்  கோதை”   என்றும்.   பிறிதொன்றை
“அல்லின் கோதை” என்றும் குறித்தார். அல்: இருள்.  இனம்  விலக்கிய
அடைமொழிகள்.  இவன்  வரவால்.  மாதர் முகம்  என்னும  தாமரைக்
காடுகள்  மலர்ந்தனவாதலால் இவனை இளஞ்சூரியன்  என்பார்.  “மாதர்
முகப்பேர்  அரவிந்தச்  செல்வக்  கானில் செங்கதிர்  என்ன”  என்றார்.
செல்வம்:  வளம்.  வளத்துக்குக்  காரணம் ஆதலின்  செல்வம்.  வளம்
ஆயிற்று.   அரவிந்தம்:  தாமரை.  கதிரவனைக்   கண்ட   தாமரைகள்
மலர்தல்  இயல்பு.  வீரனைக்  கண்ட  மாதர்கள்   மகிழ்தல்   இயல்பு.
முகப்பேர் அரவிந்தம் - உருவகம்.  சூரியனுக்கும்  தாமரைமலர் கையில்
உண்டு.                                                   32