பூக் கொய் படலம் - 1000
ஊடினாள் ஒருத்தி கண்ணடி பார்த்து வருந்தல்
1000.
நாடிக் கொண்டாள். குற்றம் நயந்தாள்;
முனிவு ஆறாள்;
ஊடிக் காணக் காட்டும் நலத்தாள்
உடன் நில்லாள்;
தேடித் தேடிச் சேர்த்த செழும் பூ
நறு மாலை
சூடிச் சூடி. கண்ணடி நோக்கித்
துவள்வாளும்;
குற்றம் நயந்தாள் நாடிக் கொண்டாள் - (தன் கணவன் மேல்)
குற்றங் காண விரும்பி. தேடிப் பிடித்துக் கற்பித்துக் கொண்டவளாய்;
முனிவு ஆறாள் - சினம் குறையாதவளாய்; ஊடி - (தன்முன் வந்த
கணவனிடம் முகங்கொடாமல்) ஊடல் கொண்டு; காண - (அதனைத்
தன் கணவன்) காணுதலால்; காட்டும் நலத்தாள் - தோன்றிய
இன்பத்தையுடையாள் ஒருத்தி; உடன் - உடனே; நில்லாள் - (அந்த
ஊடிய நிலையிலேயே) நிற்கமாட்டாதவளாய்; தேடித் தேடிச் சேர்த்த
நறும்பூ - (அச்சோலையில் பல இடங்களிலும் அவள்) தேடித் தேடித்
திரட்டிய வாச மலர்களாலான; மாலை சூடிச்சூடி - மாலையினைத்
தான் அணிந்து அணிந்து; கண்ணடி நோக்கி - (இவ்வொப்பனை
நன்றாக உள்ளதா? எனக்) கண்ணாடியில் பார்த்து; துவள்வாளும் -
(இவ்வழகை நுகர்வதற்கு அவன் அருகில் இல்லையே எனத்)
துவள்கின்றவளும்.
“இல்லை தவறு அவற்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்
அளிக்குமாறு” (திருக்.1321). “தவறிலர் ஆயினும் தாம் வீழ்வார் மென்
தோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து” (திருக். 1325) என்னும்
திருக்குறள்கள் இக்கருத்தினையுணர்த்தும். பலமுறை தேடினாள்
என்பார் “தேடித் தேடி” என்றார். மாலையைப் பலமுறை பலவகையாய்
அணிந்தணிந்து அழகு பார்த்து ஏங்கினாள் என்பார். “சூடிச் சூடிக்
கண்ணடி நோக்கித் துவள்வாள்” என்றார். மனைவி யழகெல்லாம்
கணவன் துய்த்தற்கே எனவிருந்த பழம்பண்பு கூடியவாறு. நயத்தல்:
விரும்புதல். கண்ணடி: கண்ணடி. 26
