பிரம்மச்சரிய தர்மம்
பிரம்மச்சரிய தர்மம் மன்னா! நாம் பிறந்தவுடன் நாம் மேற்கொள்ள வேண்டிய தர்மங்களில் இன்றியமையாத தர்மங்கள் நான்கு தர்மங்கள் ஆகும். அதில் பிரம்மச்சரிய தர்மத்தை பற்றி கூறுகிறேன் கேட்பாயாக! என்று கூறி, சிறுவனாக இருக்கக்கூடியவன் உபநயனம் செய்யப்பெற்று விரத நியமங்களோடு வேதங்களை கற்க வேண்டும். குருவின் இல்லத்திலேயே தங்கியிருந்து குருவுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் செய்ய வேண்டும். வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அனைத்து அனுஷ்டானங்களையும் கொண்டவனாக இருந்து அந்த வேதங்களை கற்க வேண்டும். காலையிலும், மாலையிலும் சூரியனையும், அக்னியையும் மனம் ஒன்றி முழுமையான திருப்தியுடன் பூஜிக்க வேண்டும். தினமும் குருவை வணங்கி வர வேண்டும். சீடன் ஆனவன் தன்னுடைய குருவானவர் நிற்கும் பொழுது தானும் நிற்க வேண்டும். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அவ்விடத்திற்கு எல்லாம் தானும் செல்ல வேண்டும். அவர் மேலே உட்காரும் பொழுது சீடனாவன் கீழே உட்கார வேண்டும். ஒரு பொழுதும் குருவுக்கு விரோதமான செயல்களை செய்தல் என்பது கூடாது. அவர் கட்டளையிட்ட பின்பே அவருக்கு எதிரில் நின்று வேறு எந்த நினைவுகளும், எண்ணங்களும் இல்லாமல் வேதங்களின் உட்பொருளை கற்று உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். குருவின் அனுமதி பெற்ற பின்பே அன்றைய உணவையும் உட்கொள்ள வேண்டும். குருவானவர் எங்கு நீராடுகின்றாரோ அவ்விடத்திலேயே சீடனும் நீராட வேண்டும். குருவானவர் நீராடிய பிறகு தான் சீடன் நீராட வேண்டும். நாள்தோறும் காலையில் சமித்து தர்ப்பை முதலியவைகளை குருவுக்குக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இவ்விதமாக குரு இடத்திலிருந்து கற்க வேண்டிய வேதங்கள் அனைத்தையும் கற்று, முழுமையான ஞானமும் கிடைத்த பின்பு, குருவினுடைய அனுமதி பெற்ற பிறகு குருவுக்கு தேவையான காணிக்கையை அளித்துவிட்டு கிருகஸ்தாசிரமத்துக்கு செல்ல வேண்டும். இனி கிருகஸ்தாசிரமம் என்ற இல்லற வாழ்க்கையின் ஒழுக்கத்தையும், அதில் என்னென்ன செயல்களை செய்ய வேண்டும் என்பதையும் உரைக்கின்றேன். பிரம்மச்சரியத்தை முறையாக கழித்த பின்பு அவரவர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவரவர்களின் திறமைக்கு உண்டான தொழிலில் ஈடுபட்டு, பொருள் ஈட்டி நல்முறையில் இல்லற வாழ்க்கையை நடத்த வேண்டும். பருவகாலங்களில் பிண்டம் விடுவதிலும், எள்ளுடன் கூடிய தண்ணீரால் அவரவர்களின் முன்னோர்களையும், யாகங்களினால் தேவாதி தேவர்களையும், வேத அத்தி யாமத்தினால் முனிவர்களையும், சந்ததிகளினால் பிரம்ம தேவனையும், பூதப்பலி கர்மத்தால் (யாகங்களில் கொடுக்கப்படும் அன்னம்) வாத்சல்யம் அன்பினால் சகல உலகங்களையும் திருப்திபடுத்த வேண்டும். இவ்விதமாக நல்லமுறையில் வாழ்கின்ற திருமணமான கிரகஸ்தன் தன்னுடைய சுக கர்மங்களில் சம்பாதிக்கப்பட்ட அநேக புண்ணிய உலகங்களை அடைவான். மற்றவர்களிடத்தில் பிச்சை எடுத்து உண்ணக்கூடிய துறவிகள் பிரம்மச்சாரிகள் யாரெல்லாம் இருக்கின்றார்களோ அவர்கள் அனைவருமே கிரகஸ்தன் இடத்தில் நிலை பெற்று இருக்கின்றார்கள். ஆகையால் இல்லற வாழ்க்கை என்பது அனைத்திலும் உயர்ந்ததாகும். அதுமட்டுமல்லாது வேதங்களை கற்பதற்காகவும், தீர்த்த யாத்திரை செல்வதற்காகவும், பரந்து விரிந்து இருக்கக்கூடிய இந்த பூமியை பார்ப்பதற்காகவும் வேதத்தின் உட்பொருளை அறிந்தவர்கள் நாடு விட்டு நாடு திரிந்து கொண்டிருக்கின்றார்கள். சிலரோ தனக்கென்று இடமில்லாமல், சரியான உணவுகள் இல்லாமல் சூரியன் எவ்விடத்தில் அஸ்தமனம் ஆகின்றாரோ அவ்விடமே தனக்கான வீடாக கொண்டு திரிந்து கொண்டு இருக்கின்றார்கள். இத்தகைய அனைவருக்கும் இல்லறத்தார் ரச்சிப்பவராக இருக்கின்றனர். இவ்விதமாக சுற்றித் திரிகின்றவர்கள் தங்களின் இல்லத்திற்கு வரும் பொழுது அவர்களிடத்தில் இனிமையான பேச்சுகளை இல்லறத்தான் பேசி ஆசனம் மற்றும் அவனுக்கு உண்டான உணவுகளையும், உறங்குவதற்கு உண்டான இடத்தையும் வழங்க வேண்டும். ஒருவேளை வேதத்தின் உட்பொருளை அறிந்தவனும், இறைவனிடத்தில் நல்ல அன்பும், பக்தியும் கொண்டவனும், உயிர்களிடத்தில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருக்கக்கூடியவன் அவன் மேற்கொண்ட பயணத்தின் காரணமாக உடலில் ஏற்பட்டிருக்கும் அசதியினால் யாரிடத்தில் வந்து இவற்றை கேட்கிறானோ அவன் அவர்களுக்கு கொடுக்க மறுத்தால் அந்த வேதப் பொருளை அறிந்த இறைவனின் அன்பைப் பெற்றவன் அந்த இல்லறத்தானுக்கு தன்னுடைய பாவத்தை கொடுத்துவிட்டு அவன் செய்த புண்ணியத்தை எடுத்துக்கொண்டு போகிறான். இல்லற வாழ்க்கையில் வாழ்கின்றவன், மற்றவர்களை மதிக்காமல் தான் தான் பெரியவன் என்ற கர்வம் இல்லாமல், சிறு விஷயங்கள் செய்தாலும் அதை உலகம் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், எந்தவிதமான சலனமும் இல்லாமல், அனைத்து உயிரினங்களையும் சமமாக கருதுகின்ற நல்ல குணங்களை உடைய கிரகஸ்தன் தனக்குரிய தர்மங்களை நன்முறையில் செய்யும் பட்சத்தில் அவன் சகல இடையூறுகளில் இருந்து விடுபட்டு உன்னதமான உலகத்தை அடைவான். சந்நியாசி நண்பர்களிடத்திலும், பகைவரிடத்திலும் ஒரே விதமான நட்புடனும், அன்புடனும் இருந்து வாழ வேண்டும். மிருகங்கள் பறவைகள் முதலிய வாயில்லா உயிரினங்கள் இடத்திலும் வாக்கு, மனம், காயம் (உடல்) என்ற மூன்றாலும் எந்தவிதமான துரோகமும், இன்னல்களும் செய்யாமல் இருக்க வேண்டும். புத்திராதி தொடர்புகளையும் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். கிராமத்தில் செல்லும்பொழுது ஓர் இரவு மட்டும் அவ்விடத்தில் தங்கவேண்டும். பட்டினத்தில் வாழும் பொழுது ஐந்து இரவுகள் என இடத்திற்கு தகுந்த விதத்தில் வாசம் செய்து கொண்டு ஒருவர் இடத்திலும் பகைமையும் நட்பு வராதவாறு நடந்து கொள்ளுதல் அவசியமாகும். தனக்குப் பசி எடுக்கும் பொழுது அவ்விடத்தில் தங்கி இருக்கக்கூடிய மக்கள் உணவு உண்ணும் பொழுது மட்டும் நல்ல எண்ணங்களும், நல்ல தர்மங்களும் செய்தவர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருக்கக்கூடிய வீட்டுக்கு சென்று யாசகம் கேட்கலாம். சந்நியாசியாக இருக்கக்கூடியவன் எந்தவிதமான காம, குரோத, லோப, மத பேதங்களை கடைபிடித்தல் என்பது கூடாது. எதிலும் மாறுபட்ட சிந்தனைகளை கொண்டவனாக இருக்கக்கூடாது. கிடைப்பது அனைத்திலும் எனது என்ற அபிமானம் கொண்டவனாக இருக்கக்கூடாது. எந்த துறவியானவர் சகல பூதங்கள் இடத்திலும் புரிதல் கொண்டு, எந்த பூதத்தையும் பாதிக்காத வண்ணமாக இருக்கின்றானோ அவனுக்கு சகல பூதங்களால் எந்த விதமான துன்பங்களும் ஏற்படாது. சகல பூதங்களை அவன் கண்டாலும் அதனிடத்தில் அச்சம் என்பது எள்ளளவும் தோன்றாது. இவ்விதமாக பிரம்மத்தின் பொருளை நன்கு உணர்ந்தவன் துறவியாகி தன்னுடைய உடலில் இருக்கக்கூடிய அக்னி ஹோத்திரத்தை தனது சரீரத்திலேயே இருக்க செய்து தன்னுடைய சரீரத்தில் இருக்கும் அக்னியை குறித்து தன் முகமாகிய குண்டத்தில் பிக்ஷையினால் கிடைக்கக்கூடிய அவிசுகளை விதிப்படி ஹோமம் செய்து வருவாய் எனில் அவன் அக்னி சயனஞ் செய்தவர்கள் அடையும் உலகங்களை அடைவான். இது சாதாரண சந்நியாசிகள் குறித்ததாகும். சந்நியாசி அடையக்கூடிய சிரமத்தை பற்றி கூறுகிறேன் கேட்பாயாக. எவன் ஒருவன் எந்த விதமான மாற்றங்கள், வேறுபாடுகள் எதையும் கொண்டிராத நிலையான புத்தி உடையவனாகவும், தூய்மை உடையவனாகவும் இந்த சந்நியாசத்தை முறைப்படி பின்பற்றுகின்றோனோ அவன் எரி கரும்பு இல்லாத அக்னியைப் போல மிகவும் சாந்தமான ஜோதியாக இருக்கக்கூடிய பிரம்ம லோகத்தை அடைகின்றான்.
