பாலசரஸ்வதி

பாலசரஸ்வதி

bookmark

வாழ்க்கை வரலாறு

தஞ்சாவூர் பாலசரஸ்வதி தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர். இவருடைய முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார்.

பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது.

பாலசரஸ்வதி, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரதநாட்டியத்தின் புகழைப் பரவச் செய்தார். பாரம்பரிய நடனம், இசை ஆகிய இரண்டையும் கற்றுத் தேர்ந்து, இரண்டிலும் புரட்சியை ஏற்படுத்தினார். இவரது நடனத்தால் கவரப்பட்ட பிரபல நடன இயக்குநர் உதய் ஷங்கர், இவரது நடனக் கலையை நாடு முழுவதும் பரவச் செய்தார். தனது குடும்பத்திலேயே தென்னிந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக கலை நிகழ்ச்சி நடத்தியவர் இவர்தான். இவரது முதல் நிகழ்ச்சி 1934-ல் கல்கத்தாவில் நடைபெற்றது. ‘உலகின் தலைசிறந்த நடனக் கலைஞர்’ எனவும் போற்றப்பட்டார்.

1960-களில் சர்வதேச அங்கீகாரம் பெறத் தொடங்கினார். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுவதும் இவரது நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கலைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடன ஆசிரியராகப் பணியாற்றவும், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தவும் 1980களில் அமெரிக்கா சென்றார். சென்னை மியூசிக் அகாடமி தந்த ஊக்கத்தால் அந்த அமைப்புடன் இணைந்து நாட்டியப் பள்ளியை நிறுவினார்.

இவரது நடனக் கலையால் ஈர்க்கப்பட்ட சத்யஜித் ரே இவரை வைத்து ‘பாலா’ என்ற குறும்படம் தயாரித்தார். நாட்டின் 2-வது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ விருது இவருக்குக் கிடைத்தது. சென்னையில் உள்ள இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, இவருக்கு ‘சங்கீத கலாசிகாமணி’ விருதை வழங்கியது. மேலும் பத்மபூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும் பெற்றார். உலக அளவில் பல கவுரவங்களைப் பெற்றார். இந்தியாவில் பரத நாட்டியக் கலைக்கு புத்துயிர் அளித்து, பரதநாட்டியத்தில் தனி முத்திரை பதித்த பாலசரஸ்வதி 66 வயதில் (1984) மறைந்தார்.