பாரத மாதா
தான தனந்தன தான தனந்தன
தானனத் தானா னே.
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில். 1
இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள்
மந்திரத் தெய்வம் பாரத ராணி,
வயிரவி தன்னுடைய வில். 2
ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே - மிக
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன்திருக் கை. 3
சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல். 4
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளையாடி - நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை. 5
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள். 6
சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர் கொடைக்கை? - சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை. 7
போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய்? - பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவிமலர் திரு வாய். 8
தந்தை இனிதுறந் தான் அரசாட்சியும்
தையலர் தம்முறவும் - இனி
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
எம் அனை செய்த உள்ளம். 9
அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே - இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி. 10
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி - தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி. 11
தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை? - அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை. 12
