பாரத தேவியின் திருத் தசாங்கம்
நாமம்
(காம்போதி)
பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு. 1
நாடு
(வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய்! தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி. 2
நகர்
(மணிரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம். 3
ஆறு
(சுருட்டி)
வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து. 4
மலை
(கானடா)
சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய்! - ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு. 5
ஊர்தி
(தன்யாசி)
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய்! தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள். 6
படை
(முகாரி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! - பொருபவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு. 7
முரசு
(செஞ்சுருட்டி)
ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய்! - பேசுகவோ
சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு. 8
தார்
(பிலகரி)
வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுபணித் தார்கூறாய்! - சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து. 9
கொடி
(கேதாரம்)
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி. 10
~~chapter~~14
~~title~~தாயின் மணிக்கொடி பாரீர்
~~page_heading~~தாயின் மணிக்கொடி பாரீர்
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்) 1
பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்) 2
இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்) 3
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்) 4
அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்) 5
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்) 6
கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர். (தாயின்) 7
பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர். (தாயின்) 8
பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும், (தாயின்) 9
சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) 10
