பள்ளிபடைப் படலம் - 2247
பரதன் சிறிது தேறுதல்
2247.
ஆற்றலன், இன்னன பன்னி ஆவலித்து,
ஊற்று உறு கண்ணினன், உருகுவான்; தனைத்
தேற்றினன் ஒரு வகை; சிறிது தேறிய,
கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான்.
ஆற்றலன் - (தந்தை இறந்த துயரைப்) பொறுக்க மாட்டாதவனாய்;
இன்னன -இவ்வாறமைந்த சொற்களை; பன்னி - பலமுறை சொல்லி;
ஆவலித்து -அழுதிரங்கி; ஊற்று உறு கண்ணினன் - ஊற்றுப் போல
மேலும் மேலும் பெருகுகின்ற கண்ணீரையுடையவனாய்; உருகுவான்- மனம்
கரைந்து உருகும் பரதன்; தனை ஒருவகைதேற்றினன் - தன்னைத்
(தானே) ஒருவகையாகத் தேற்றிக் கொண்டான்; சிறிது தேறிய- ஓரளவு
மனத்தெளிவு அடைந்த; கூற்று உறழ் வரிசிலைக் குரிசில் - யமனை
ஒத்தகட்டமைந்த வில்லினை உடைய பரதன்; கூறுவான் - சொல்லுவான்
ஆனான்.
அவலித்து - அவலப்பட்டு (அழுகை அடைந்து) என்பது ஆவலித்து
என முதல் நீண்டதுதுக்கமிகுதியைக் காட்டியது. ஊற்று உறு கண் - ஊற்றில்
நீர் பெருகுவது போல கண்ணிலிருந்துதுன்பத்தால் நீர் பெருகுகிறது
என்பதாம். ‘கூற்று உறழ்’ என்பதனைக் குரிசில் என்பதனோடுகூட்டுக.
யமனை ஒத்த கட்டமைந்த வில் எனலும் ஆம். 57
