பள்ளிபடைப் படலம் - 2218

bookmark

நாட்டின் நிலை கண்ட பரதன் நிலை

பொலிவழிந்த நாட்டைக் கண்ட பரதன் துன்புறுதல்  

2218.    

என்ற நாட்டினை நோக்கி, இடர் உழந்து,
ஒன்றம் உற்றது உணர்ந்திலன், உன்னுவான்,
‘சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம்’ எனா,
நின்று நின்று, நெடிது உயிர்த்தான்அரோ!

     என்ற - முன் கூறியவாறு  உள்ள; நாட்டினை - கோசல நாட்டை;
நோக்கி - (பரதன்) பார்த்து; இடர் உழந்து - பெருந்துன்பத்தாற் கலங்கி;
உற்றது ஒன்றும் உணர்ந்திலன் - நிகழ்ந்த செய்திகள் ஒன்றும்
உணராதவனாய்;  ‘சென்றுகேட்பது ஓர் தீங்கு’ - நாம் போய்க் கேட்கப்
போகின்ற தீய செய்தி ஒன்று; உளதுஆம்’ எனா - இப்பொழுது
நேர்ந்துள்ளதாகும் என்று; உன்னுவான் - கருதியவனாய்; நின்று நின்று -
தயங்கிச் சோர்ந்து; நெடிது உயிர்த்தான் - பெருமூச்சுவிட்டான்.

     நாட்டைக் கண்ட அளவிலே  தீய செய்தியைக் கேட்கப்போகிறோம்
என்னும் நினைவுஉண்டாயிற்று என்பதாகும்.  துன்ப மிகுதியில் பெரு மூச்சு
எறிதல் வழக்கு. ‘அரோ’ஈற்றசை.                                 28