பள்ளிபடைப் படலம் - 2203
2203.
வில்லின் வேதியர், வாள் செறி வித்தகர்,
மல்லின் வல்லர், கரிகையின் வல்லவர்,
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்,
தொல்லை வாரணப் பாகரும், சுற்றினார்.
வில்லின் வேதியர்- வில் வித்தைக்குரிய நூலில்
தேர்ச்சியடைந்தவர்களும்; வாள்செறி வித்தகர்- வாட்போர் புரிவதில்
திறமை உடையவரும்; மல்லின் வல்லார்- மல்சண்டையில் வலிமை
படைத்தவரும்; கரிகையின் வல்லவர்- குற்றுடைவாளை வீசுதலில்
வல்லவர்களும்; கொல்லும்- (பிறரை) அழிக்கின்ற; வேல் குந்தம் சுற்று
உயர் கொற்றவர்-வேல் ஈட்டி ஆகிய படைகளை வீசக் கற்று உயர்ந்த
வெற்றியாளர்களும்; தொல்லை- பழமையான(அனுபவம் மிக்க); வாரணப்
பாகரும்- யானை ஓட்டுநரும்; சுற்றினார்- சூழ்ந்து வந்தார்கள்.
வேதம் வல்லவர் வேதியர். இங்கு வில் வேதம்; தனுர் வேதம் என்று
வடிமொழியிற்குறிப்பிடுவர். கொல்லும் வேல் உபசார வழக்கு. 13
