பல்லவர் காலமும் சமுதாய மாற்றமும்
பல்லவர்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் பற்பல. அவற்றுள் முதன்மையானது சங்க கால மன்னர்களுக்குப் பின் மக்களின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் பல்லவர்கள் காட்டிய அக்கறையாகும். பல பேரேரிகளையும் குளங்களையும், கிணறுகளையும் ஆற்று வாய்க்கால்களையும் வெட்டியவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் காலத்தில் வரிச்சுமை அதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே அமைந்தது. வேளாணமை வரி, தொழில்வரி என்று தனித்தனியே பிரித்து வரி வசூலித்தனர். அவர்கள் காலத்தில் வடமொழிக் கல்வியே ஊக்குவிக்கப்பெற்றது. இக்காலத்தில் சமண பௌத்த சமயங்கள் நிலவிய போதும் சைவமே தழைத்தோங்கி செல்வாக்கு பெற்றது.
பல்லவர் ஆட்சி முறை:
பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) என்பன போன்றவை பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர்.
மன்னர்:
நாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் இருந்தது. அரசனாகும் உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்தது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை இரண்டாம் பரமேசுவரன் மகன் சித்திரமாயன் அரசனாக ஆவதற்குத் தகுதியற்றவனெனக் கருதப்பட்டு, பல்லவ மன்னன் இரண்டாம் நந்தி வர்மன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாக ஆனதைக் குறிப்பிடலாம். பல்லவ மன்னர்கள் கல்வி, அறிவு, கலையறிவு, பண்பாடு, ஆட்சித்திறன், வீரம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கினர். சமயத்திலும் இறைவழிபாட்டிலும் பல்லவ மன்னர் அளவிலாத ஈடுபாடு கொண்டனர்.
அரசு அலுவலர்கள்:
பல்லவ மன்னர்களுக்கு ஆமாத்தியர்கள் என்ற அமைச்சர்கள் இருந்தனர் என்பதற்கும், அமைச்சர் குழு இருந்தது என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சன் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப்பேரரையன் என்ற அமைச்சர் பெயர்களால் தகுதியுடைய பிராமிணர்களும் வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அறிகிறோம். பல்லவ வேந்தர்களிடம் உள்படு கருமத்தலைவர், வாயில் கேட்பார், கீழ்வாயில் கேட்பார் போன்ற அதிகாரிகள் ஆட்சி நடத்த உதவி புரிந்தனர். பொற்கொல்லர், பட்டய எழுத்தாளர், காரணீகர் போன்றோர் அரண்மனை அலுவலராக விளங்கினர்.
சின்னம்:
பல்லவ வேந்தர்கள் நந்திச் சின்னத்தை அதிகார பூர்வ அரச சின்னமாகக் கொண்டவர்கள். அதன் மூலம் அவர்கள் சிவ பக்தர்கள் என்பதை நாம் தெள்ளத் தெளிவாகக் காணலாம். சில பட்டயங்களில் சிங்கச் சின்னமும் காணப்படுகின்றது. இச்சிங்கச்சின்னம் பட்டயங்கள் பல்லவ மன்னர்களால் போர்க்களங்களிலிருந்து விடப்பட்டவையாகும். அதனால் ராணுவ ரீதியாக சிங்கச் சின்னத்தைப் பயன்படுத்தினாலும் அதிகாரபூர்வ அரசு முத்திரையாக நந்திச் சின்னம் தான் பயன்பாட்டில் இருந்து வந்தது தெரிகிறது. பல்லவர் நாணயங்களிலும் நந்திச் சின்னத்தை காணலாம்.
நீதி:
காஞ்சி போன்ற பெருநகரங்களில் நடைபெற்ற நீதிமன்றங்களுக்கு அதிகரணம் என்று பெயர் வழங்கப்பட்டது. அந்நீதிமன்றத் தலைவர்கள் 'அதிகரண போசகர்' என்று அழைக்கப்பட்டார். சிற்றூரில் உள்ள நீதிமன்றங்கள் 'கரணங்கள்' எனவும் அதன் தலைவர் 'கரண அதிகாரிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வதிகரணங்கள், குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எனவும் 'தருமாசனம்' எனவும் அழைக்கப்பட்டது. இது தவிர உயர்நீதிமன்றம் அரசனது நேரான மேற்பார்வையில் பிற வழக்குகளை விசாரிக்கும் எனவும் ஒருவாறு உணரலாம். மேலும், சிற்றூர்களில் இருந்த அரங்கூர் அவையத்தார் வழக்குகளை ஆட்சி (அநுபோக பாத்தியர்), ஆவணம் (எழுத்து மூலமான சான்றுகள்), அயலார் காட்சி, கண்டார் கூறு ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்து முடிவு கூறினர்.
பல்லவர் படை வலிமை:
பல்லவர் பண்பட்டதும், திறனுடையதுமான படை வைத்திருந்தனர் என்பது அவர்கள் கதம்பர், சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் போன்ற வடபுலத்து மன்னர்களோடும், பாண்டிய, சோழ, களப்பிரரோடும் போரிட்டதிலிருந்து அறியலாம். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன், நரசிம்மன் காலத்தில் வாதாபி கொண்ட பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வில்வலம் என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவனான பூசான்மரபினைச் சேர்ந்த உதயசந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தின் பூதிவிக்கிரமகேசர் என்னும் கொடும்பாளுர் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர்.
பல்லவர் மிக வலிமையுடைய கடற்படை வைத்திருந்தனர் என்ற செய்தியை மாமல்லனாகிய நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின்மீது படையெடுத்ததிலிருந்தும், நிருதுபங்கவர்மன் காலத்தில் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவனின் கடற்படை கொண்டு ஈழத்தின் மீது படையெடுத்ததிலிருந்தும் அறியலாம். மேலும் சீனம், சயாம் போன்ற கடல் கடந்த நாடுகளுடன் கடல் வாணிகம் செய்த செய்திகளையும் அறிகிறோம். கப்பலை நாணயத்தில் பொறித்து வெளிட்ட தமிழக மன்னர்களில் முதல்வர் பல்லவர்களே.
ஊராட்சி முறை:
ஊரின் ஆட்சி ஊரவைப் பெருமக்களால் நடைபெற்றது. ஊரவைகள், ஏரிவாரியம், தோட்டவாரியம் போன்ற பல வாரியங்கள் வாயிலாக மக்களாட்சி நடத்தியது. ஆளுங்கணத்தார் என்போர் சிற்றூர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர்களாவர். கோயில் தொடர்புற்ற பல்வகை செயல்களையும் கவனித்துக் கோயில்களைப் பாதுகாத்தவர் 'அதுர்கணத்தார்' எனப்பட்டனர். இவர்கள் கோயில் தொடர்பான செய்திகளில் ஊரவைக்குப் பொறுப்பானவர்களாவர்.
சிற்றூர்களின் எல்லைகள் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. கிணறுகள், குளங்கள், கோயில்கள், ஓடைகள் முதலியன ஊருக்குப் பொதுவாக விளங்கின. நெல் அடிக்கும் களத்துகு வரியாக, நிலத்துச் சொந்தக்காரர் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றூர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தினர்.
பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றூர்கள் பிரமதேயச் சிற்றூர்கள் எனப்பட்டன. இவை எவ்வித வரியும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. சில உரிமைகள் வழங்கப்பட்டதோடு நிலங்கள் தானமாக அளிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் மேலிருந்த தனிப்பட்ட குடிமக்களின் உரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டன. தானம் அளிக்க விரும்பும் ஒருவன் தானமாக வழங்கப்பட இருக்கும் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கி தன் சொந்தமாக்கிக் கொண்டபிறகே தானமாக வழங்குவான். பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமதேயம், கோயில்களுக்கு வழங்கப்படும் தேவபோகம் தேவதானமாகப் பௌத்த, சமண சமய மடங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்தம் ஆகியவை இம்முறையைப் பின்பற்றியே தானமாக வழங்கப்பட்டன. இக்கிராமங்களின் நிர்வாகத்தினை நாடுகாப்பாணும்,அதன்பணியை தானம் பெற்றவர்களும் அவர்கள் மரபு வழியினரும் கவனித்து வர வேண்டும் என்பது தானத்தில் நிபந்தனையாகும்.
