பராசக்தி துதி

பராசக்தி துதி

bookmark

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி;
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்யமணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள். 1

தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாகப்
போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமகா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித் தமரத் தன்மை ஈவாள். 2

மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி.
பாகார்ந்த தேமொழியாள்,படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி
ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை.
சோகா டவிக்குளெனைப் புகவொட்டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள். 3