பராக் ஒபாமா

பராக் ஒபாமா

bookmark

பராக் உசேன் ஒபாமா, ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய குடியரசுத் தலைவர். 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார். அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்தும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களை பெற்ற ஒபாமா அரசியல் உலகத்தை சேர்வதற்கு முன்பு சிக்காகோவின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997 இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார். 1992 முதல் 2004 வரை சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 2000 இல் அமெரிக்கக் கீழவை தேர்தலில் தோல்வி அடைந்து 2003 ஜனவரியில் மேலவையை சேர்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கினார்.

இலினொய் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுதே, 2004ல் மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் ஆற்றிய சிறப்புரை தேசிய அளவில் கவனம் பெறச் செய்தது. பின்னர் நவம்பர் 2004 இல் அமெரிக்க மேலவை தேர்தலில் 70% வாக்குகளைப் பெற்று மேலவையை சேர்ந்தார்.

2004 இல் மக்களாட்சிக் கட்சி மேலவையில் சிறுபான்மையாக இருந்த காலத்தில் ஒபாமா பதவியில் ஏறினார். நடுவண் அரசின் ஆயுதங்கள் கட்டுப்பாட்டை உறுதியாக்க சட்டத்தை படைத்தார். 2006 இல் மக்களாட்சி கட்சி பெரும்பான்மை பெற்றதற்கு பிறகு தேர்தல் மோசடி, காலநிலை மாற்றல், அணுசக்தி தீவிரவாதம், முன்னாள் படையினர்களுக்கு நல்வாழ்வு போன்ற பிரச்சனைகளை தொடர்புடைய சட்டங்களை எழுதினார். பிப்ரவரி 2007 இல் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியை அறிவித்த ஒபாமா ஈராக் போரை முடிவுக்கு கொணர்தல், ஆற்றல் சுதந்திரம் அடைதல், வெளி அமைப்புகளால் அரசியல்வாதிகள் மீது தாக்கத்தை குறைத்தல், அனைவருக்கும் சுகாதார திட்டம் ஆகியவையே தனது முக்கிய நோக்கங்கள் என்று கூறினார்.

ஒபாமா வாழ்க்கை வரலாறும் தொழிலும் :-

கென்யாவைச் சேர்ந்த பராக் ஒபாமா சீனியர் அவர்களுக்கும், கேன்சஸ் மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன ஸ்டான்லி ஆன் டன்ஹமு என்ற பெண்ணிற்கும் மகனாகப் பிறந்தார் பராக் ஒபாமா. இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார். பின்னர் ஆன் டன்ஹம் இந்தோனேசியாவை சேர்ந்த லோலோ சுட்டோரோவை திருமணம் செய்து கொண்டார். அதனால் பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை ஜகார்த்தாவில் வசித்தார். ஐந்தாவது படிப்பதற்கு முன்பு 1971 இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர் பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமாவின் சொந்த தந்தையான பராக் ஒபாமா சீனியர் 1982 இல் சாலை விபத்தில் உயிர் இழந்தார். தாயார் ஆன் டன்ஹம் 1995 இல் சூல்பைப் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். 2008 இல் நவம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். சிறு வயதினராக இருக்கும் பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார்.

உயர்பள்ளியில் பட்டம் பெற்று லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு நகர்ந்து ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி 1983 இல் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். நியூயார்க் நகரிலேயே இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து வணிக பன்னாட்டு நிறுவனம், நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம் ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார். நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். 1985 முதல் 1988 வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு பல நல்ல திட்டங்களை உருவாக்கியுள்ளன.

1988 இல் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியை சேர்ந்த ஒபாமா ஒரு ஆண்டுக்கு பிறகு ஹார்வர்ட் சட்ட விமர்சனம் (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டு பின்பு இவ்விதழின் முதல் கருப்பின தலைவராக உறுதி செய்யப்பட்டார். இதனால் 1991 இல் சட்டப் பட்டத்தை பெறுவதற்கு பிறகு அமெரிக்க இன உறவு பற்றிய நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1995 இல் "ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்" (Dreams From My Father) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. பின்னர் சிக்காகோக்கு திரும்பி 1992 இல் சிக்காகோ சட்டக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். 1993 இல் ஒரு சட்ட நிறுவனத்தையும் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணி புரிந்தார். இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும் பொழுது எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதலாக சந்தித்தார்; மிசெல்லை 1992 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இன்று வரை இரண்டு பெண் குழந்தைகள், மலியா (பி. 1998) மற்றும் சாஷா (பி. 2001) பிறந்தனர்.

இலினொய் சட்டமன்றத்தில் (1997-2004) :-

சிக்காகோவின் தெற்கு பகுதி உள்ளிட்ட 13 ஆம் தேர்தல் மாவட்டத்தின் சார்பில் 1996 இல் ஒபாமா இலினொய் மாநில மேலவைக்கு (செனட் அவை) தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நெறிமுறைகள் மற்றும் உடல் நலம் தொடர்பான இவரால் எழுதிய சட்டங்களுக்கு இரண்டு அரசியல் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். ஏழை மக்களுக்கு வரி குறைதல், நிதியுதவி (welfare) முறையை சீரமைப்பு செய்தல், குழந்தை உடல் நலம் தொடர்பான சட்டங்களுக்கு இவர் ஆதரவளித்தார்.

1998 இலும் 2002 இலும் மீண்டும் இலினொய் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 இல் அமெரிக்கக் கீழவைக்கு போட்டி நடத்தி முதல் கட்டத் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஜனவரி 2003 இல் இலினொய் செனட் அவையில் மக்களாட்சிக் கட்சி பெரும்பான்மை அடைந்து ஒபாமா மருத்துவம் மற்றும் மனித நல செயற்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 2004 இல் அமெரிக்க மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு இலினொய் சட்டமன்றத்திலிருந்து விலகியுள்ளார்.

2004 மேலவை போட்டி:-

2002 ஆம் ஆண்டு முதலாக அமெரிக்க மேலவைக்கு போட்டி செய்ய சிந்தித்துப் பார்த்து ஜனவரி 2003 இல் மேலவைப் பிரச்சாரத்தை அறிவித்துள்ளார் ஒபாமா. மார்ச் 2004 இல் நடந்த மக்களாட்சிக் கட்சி முதல்கட்ட தேர்தலில் 52% வாக்குகளை பெற்றார். ஜூன் 2004 இல் எதிர்ப்பார்த்த குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜாக் ரயன் போட்டியை கை விட்டார்.

பாஸ்டன், மாசசூசெட்ஸில் ஜூலை 2004 இல் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் எழுதி ஆற்றிய சிறப்புரை காரணமாக முதன் முதலாக அமெரிக்காவில் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். இச்சிறப்புரையில் ஜார்ஜ் வாக்கர் புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளை கண்டனம் செய்து அமெரிக்கப் படையினர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தார். அமெரிக்க வரலாற்றை குறிப்பிட்டு அமெரிக்க அரசில் இருந்த அரசியல் கட்சி அடிப்படையில் பிரிவுகளை கண்டனம் செய்து அமெரிக்க மக்களை ஒன்றாக சேர அறிவித்தார். இது தொடர்பாக ஒபாமா, "முற்போக்குவாத அமெரிக்காவும் பழமைவாத அமெரிக்காவும் இல்லை; ஒரே ஐக்கிய அமெரிக்க தான்" ("There is not a liberal America and a conservative America, there's the United States of America.") நவம்பர் 2004 தேர்தலில் ஆலன் கீசுக்கு எதிராக போட்டி போட்ட ஒபாமா 70% வாக்குகளை பெற்று மேலவை பதவியில் ஏறினார்.

மேலவை உறுப்பினர், 2005-2008 :-

ஒபாமா ஐந்தாவது கருப்பின மேலவை உறுப்பினராகவும் மூன்றாவது தேர்தலை வென்ற மேலவை உறுப்பினராகவும் ஜனவரி 4, 2005 அன்று உறுதி செய்யப்பட்டார். 2007 இல் இவர் செய்த வாக்குகளை ஆராய்ச்சி செய்து தேசிய சஞ்சிகை (National Journal) இதழ் இவரை மேலவையில் மிக முற்போக்குவாத உறுப்பினராக அறிவித்துள்ளது. காங்கிரஸ். ஆர்க் இணையத்தளம் இவரை 2008 இல் 11 ஆம் மிக வலிமையான மேலவை உறுப்பினர் என்று அறிவித்துள்ளது.

2008 குடியரசுத் தலைவர் பிரச்சாரம்:-

2007 இல் பிப்ரவரி 10ஆம் தேதி இலினொய் மாநிலத்தின் தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்டில் குடியரசுத் தலைவர் போட்டியை ஒபாமா தொடங்கினார். முதல் 6 மாதங்களில் ஒபாமாவின் பிரச்சாரம் $58 மில்லியன் நன்கொடைகளை குவித்தது. ஜனவரி 2008 இல் தொடங்கிய மக்களாட்சிக் கட்சி மாநில முதல்கட்ட தேர்தல்களில் ஒபாமா இலரி கிளின்டனுக்கு எதிராக ஒரே அளவிலான போட்டி செய்தார். முதலாக நடந்த அயோவா, நெவாடா, தென் கரொலைனா மாநிலங்களில் முதல் கட்ட போட்டிகளில் வெற்றி பெற்று நியூ ஹாம்சயர் மாநிலத்தில் இலரிக்கு நிகராக ஒரே அளவில் வாக்குகளை பெற்றார்.

மார்ச் 2008 இல் ஒபாமா சேர்ந்த தேவாலயத்தின் முன்னாள் அறவுரையாளராக இருந்த ஜெரமையா ரைட் அமெரிக்கவை கண்டனம் செய்ததை ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஒபாமா ரைட்டை கண்டனம் செய்து 20 ஆண்டுகளாக சேர்ந்த தேவாலயத்தை விட்டார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒபாமாவும் இலரியும் ஒரே அளவிலாக மாநில முதல் கட்ட தேர்தல்களில் வாக்குகளை பெற்றனர். இதனால் இவர்கள் இருவரும் ஒரே அளவில் சம்மேளன பிரதிநிதிகளின் (convention delegates) ஈடுபாட்டை பெற்றனர். ஜூன் 3 ஆம் தேதி ஒபாமா பரிந்துரைக்கப்பட வேண்டிய அளவில் பிரதிநிதிகளின் ஈடுபாட்டை பெற்றார். இதனால் ஜூன் 7 ஆம் தேதி இலரி கிளின்டன் தனது பிரச்சாரத்தை நிறுத்தி ஒபாமாவுக்கு ஆதரவளித்தார். இதற்கு பிறகு ஒபாமா குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன்க்கு எதிராக போட்டி செய்ய ஆரம்பித்தார்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி டெலவெயர் மாநிலத்தின் சார்பில் மேலவை உறுப்பினர் ஜோ பைடன் துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்வர், கொலராடோவில் நடந்த மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் ஒபாமா மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார். இவ்வாறாக படிப்படியாக முன்னேறி அமெரிக்காவின் ஜனாதிபதியானார் ஒபாமா.

ஒபாமாவின் அரசியல் கருத்துகள் :-

முதலாகவே புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக இருந்தார் ஒபாமா. அக்டோபர் 2002 இல் புஷ்சும் சட்டமன்றமும் ஈராக் போர் தொடங்க ஒப்பந்தம் செய்த நாள் ஒபாமா சிக்காகோவில் முதலாம் ஈராக் போர்-எதிர்ப்பு கூட்டத்தில் சொற்பொழிவு தெரிவித்தார். 2005 இல் பாகிஸ்தானின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் நடந்த அல் கைடா தலைவர்களின் சந்திப்பு அமெரிக்க உளவு துறைக்கு தெரிந்து அமெரிக்க அரசு அச்சந்திப்பு மீது தாக்குதல் செய்யவில்லை என்பது மிகப் பெரிய தவறு என்று ஒபாமா கூறி இவர் குடியரசுத் தலைவராக இருந்தால் பாகிஸ்தான் ஆதரவு இல்லாத இருந்தாலும் அந்த மாதிரி வாய்ப்பை தவற விட்டு இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நவம்பர் 2006 இல் ஈராக்கிலிருந்து படையினர்களை பின்வாங்கி சிரியா மற்றும் ஈரான் நாடுகளுடன் தந்திரமாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்

"ஒரு பால் ஈர்ப்புடையோரின் வாழ்க்கை முறையையும் திருமணத்தையும் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவேண்டும். அவர்களும் மனிதர்களே!'"[41]

——அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

குடியரசுத் தலைவராக இருந்தால் பில்லியன் கணக்கில் அரசு செலவையும் ஆயுதப் படைப்பையும் குறைப்பேன் என்று தெரிவித்துள்ளார் ஒபாமா. பதவி ஏற்ற சில மாதங்களில் சொன்னபடியே அனைத்து வீண் செலவுகளையும் குறைத்தார். உலக முழுவதிலும் அணு ஆயுதங்கள் படைப்பை தடை செய்ய ஆதரவளித்தார். வெளிநாட்டுக் கொள்கைகள் மூலமாக உலகத்தை வழி நடத்த வேண்டும் என்பது ஒபாமாவின் கருத்து. அதே சமயத்தில், தார்ஃபூர் போர் காரணமாக வணிக நிறுவனங்களை சூடான் நாட்டுடன் வியாபாரம் செய்ய கூடாது என்று அறிவுறுத்தினார்.

பராக் ஒபாமா அவர்களின் நற்குணம்:-

10.12.2013 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முன்னாள் தென்னாப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் தாமாக முன் வந்து கைகுலுக்கினார்.

1961 ம் ஆண்டு முதல் தங்களின் ராஜாங்க உறவுகளை முறித்துக் கொண்ட கியூபாவும், அமெரிக்காவும் இதுவரை பரம எதிரிகளாகவே இருந்துவருகின்றன. ஆனால், அதே சமயத்தில் 10.12.2013 அன்று ஒபாமா, கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் தாமாக முன் வந்து கைகுலுக்கியது. அமெரிக்க, கியூபா உறவு மேலும் சீர் கெடாமல் இருக்க வழி வகை செய்து கொடுத்தது.